பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

61

செய்தியைப்பற்றி ஆராய்ந்தான். இலங்கை சென்று இவ்வுண்மையினை அறிந்து வரத் தக்கவன் அனுமன் ஒருவனே என்று அனைவரும் முடிவு செய்தனர்.

அனுமன் இலங்கையை யடைதல்

அவ்வாறே வானர வீரர்களிடம் விடைபெற்ற அனுமன் மகேந்திர மலையின்மேல் ஏறினான். கடலைத் தாண்டி இலங்கையினை அடையும் எண்ணத்துடன் பேருருவங் கொண்டு நின்றான். அப்போது அனுமன் உடல், அண்டத்தின் முடியை முட்டுமாறு ஓங்கி உயர்ந்தது. அதனால் விண்ணவர் நாட்டைக் கண்ணால் கண்ட அனுமன், ‘இதுதான் இலங்கையோ?’ என ஐயுற்றான். அது தேவர்கள் வாழும் திருவிடம் என்பதுணர்ந்து கீழே நோக்கினான். இலங்கை மூதூர் அவனுடைய விழிகட்கு இலக்காயிற்று. அந்நகரின் வாயில், மதில், தெருக்கள் முதலிய அனைத்தையும் கண்ட அனுமன் மகிழ்ச்சி கொண்டான். தன் தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தான். வானிற் பறந்து செல்லுமாறு தன் கால்களை மகேந்திர மலையின் முடிமேல் அழுத்தி யூன்றினான். அம்மலையின் முழைகளில் வாழ்ந்த அரவங்கள், அனுமனது உடற் சுமையைத் தாங்கலாற்றாது வெளிப் போந்தன. வானவர் மலர் தூவி வாழ்த்துரை வழங்க அனுமன் மலையிலிருந்து மேலெழுந்தான். திரிகூட மலை தென்கடலை கோக்கிச் செல்வதுபோல் அனுமன் தென்றிசை நோக்கிச் சென்றான். அவன் இலங்கையில் அமைந்த பவள மலையின் மீது குதித்து நின்றான் அனுமன் குதித்தலைத் தாங்காத அம்மலை தன்னிடத்துள்ள பொருள்களுடன் தள்ளாடி நிலைகுலையலாயிற்று.