பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

63

அச்சத்தாலும் சிறிதும் உறக்கமின்றி ஒளி மழுங்கிய வடிவத்துடன் அவள் புழுவைப் போல் துடித்துக் கொண்டிருந்தாள். கணவனைப் பிரிந்த பிரிவுத் துன்பத்தால் பெருகிய கண்ணிர் அவள் ஆடையை நனைப்பதும், உடலின் வெப்பத்தால் அந்த ஆடை உடனே காய்ந்து போவதுமாக இருந்தது. எவ்விதத்திலும் இராமபிரான் வருதல் கூடும் என்ற நினைவால் அவள் எப்பொழுதும் திக்குகளையே நோக்கிக் கொண்டிருந்தாள். இராமபிரானுடைய இனிய பண்புகள் பலவற்றையும் எண்ணியெண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.

அசோகவனத்தில் சீதையும் திரிசடையும்

இத்தகைய நள்ளிரவில் சீதையைச் சூழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் தம்மை மறந்து உறங்கலாயினர். அவ்வேளையில் வீடணன் அருமைத் திரு மகளாகிய திரிசடை யொருத்திதான் சீதைக்கு அவண் இனியளாய் அமைந்து, அவள் துயரங்களை ஒருவாறு மாற்றிக்கொண்டிருந்தாள். சீதைக்குச் சில நற்குறிகள் காணப்பெற்றன. அவற்றைத் திரிசடையிடம் தெரிவித்து, அவற்றின் பயனை வினவினாள். நீ விரைவில் உன் கணவனை அடைவது உறுதியெனப் பயனுரைத்த தோழியாகிய திரிசடை, அச்சீதையை நோக்கி மேலும் கூறினாள்; “இப்பொழுது ஒரு வண்டு மெல்லென வந்து உன் காதில் இசை பாடிச் சென்றது கண்டனையோ ? அதன் பயனை ஆய்ந்து நோக்கினால் உன் தலைவனால் உய்க்கப்பெற்ற தூதன் ஒருவன் இங் குற்று உனக்கு நல்ல செய்தி உரைப்பது உறுதி; நான் கனவொன்றனைக் கண்டேன் ; குற்றம் நிறைந்த இந் நாட்டில் காணும் கனவுகள் வீணாவதில்லை” யெனக்