பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

இலக்கியத் தூதர்கள்

கூறித் தான் கண்ட கனவை விளக்கினாள். அதன் பயனாக விரைவில் இலங்கைமாநகர் அழிவது உறுதியென்றும், அரக்கர் குலமே அழிந்தொழியும் என்றும் விளக்கினாள். அதுகேட்ட சீதை, திரிசடையை மீண்டும் உறங்குமாறும், அவள் கண்ட கனவின் குறையையும் கண்டுணர்ந்து கூறுமாறும் வேண்டினாள்.

அனுமன் அடைந்த மகிழ்ச்சி

இச்சமயத்தில் சீதையைக் கண்ட அனுமனுக்குத் துன்பங்கள் எல்லாம் பறந்து போயின. இந்தப் பெண்ணரசியே சீதாபிராட்டியாதல் வேண்டுமென்று எண்ணினான். அவளை யனுகுதற்கு முற்படும் வேளையில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அரக்கியர் விழித் தெழுந்தனர். சீதையைச் சூழ்ந்து கொண்டு அவளை அச்சுறுத்தினர். அவர்களைக் கண்டு அஞ்சிய சீதை யாதும் பேசாமல் இருந்தாள். அனுமன் அந்நிகழ்ச்சிகளையெல்லாம் ஒரு மரத்தின்மீது ஏறி மறைந்திருந்து நோக்கினன். அரக்கியர் நடுவண் அமர்ந்திருப்பவள் சீதாபிராட்டியே என்று தெளிந்தான்; மிகுந்த களிப் படைந்தான். “அறம் பொய்த்து விட்டதென்று நான் முன்பு எண்ணினேன். அஃது அப்படியாகவில்லை; நானும் இனிமேல் இறக்கமாட்டேன்” என்று கூறினான். இன்பமாகிய தேனையுண்டு தன்னை மறந்து கூத்தாடினன். “இம்மங்கையர்க்கரசியின் பேரழகு, இராமபிரான் இயம்பிய அடையாளத்திற்குச் சிறிதும் மாறுபடவில்லை , கள்ளச் செயலையுடைய இராவணன் இராமபிரானுடைய உயிர்த் துணைவியாகிய இவளை ஒளித்து வைத்தது, தன்னுயிரை இழத்தற்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை ; அந்த இராமபிரான்