பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இலக்கியத் தூதர்கள்

அனுமன் சினமும் அரக்கன் ஆணையும்

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமனுக்கு அளவிலாச் சினம் பொங்கியது. ‘பிராட்டியை இகழ்ந்துரைத்த இவ்வரக்கனை அழிப்பேன்; இலங்கையைக் கடலினுள் மூழ்கச் செய்வேன் ; இப்பிராட்டியை இங்கிருந்து எடுத்துப் போய்விடுவேன் அவ்வாறு செய்வது இராமபிரானுடைய பெருமைக்கு இழுக்காகுமே’ என்று எண்ணினான். செய்யத் தகுந்தது எது என்று தோன்றாமல் கைகளைப் பிசைந்து கொண்டே பேசாதிருந்தான். சீதையின் மீது கொண்ட காதலால் சினந்தணிந்து இராவணன் மறுமொழி பலவற்றைப் பகர்ந்தான். அவள் உள்ளத்தைத் தன்பால் திருப்புமாறு அரக்கியருக்கு ஆணையிட்டு அவ்விடம் விட்டகன்றான்அரக்கியர் துயிலும் சீதையின் துயரும்

பிராட்டியைக் காணுதற்கு இதுவே ஏற்ற சமயமென எண்ணிய அனுமன் தனது மந்திர வன்மையால் அரக்கியர் உறக்கம் கொள்ளுமாறு செய்தான். உற்ற தோழியாய் அமைந்த திரிசடையும் துயில் கொள்ளலானாள். அவ்வேளையில் தனது துன்பத்திற்கு ஒரு முடிவு காணாமல் சீதை வருந்தினாள். ‘பகைவர் ஊரில் சிறையிருந்தவளாகிய என்னை அத்தூய்மையாளர் சேர்த்துக் கொள்வரோ ? பிறர் என்னை விரும்பியதை உணர்ந்தும் நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன்: என்னினும் கொடிய அரக்கியர் உளரோ? கணவனைப் பிரிந்தும் உயிர்வாழ்ந்திருக்கும் பெண்கள் என்னைத் தவிர வேறு யாருளர்?’ இங்ஙனம் பலவாறு நினைந்த சீதை, தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிந்து குருக்கத்திப் புதரொன்றைக் குறுகினாள்.