பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

இராமன் விடுத்த தூதன்

இராம தூதனைச் சீதை காண்டல்

இவ்வேளையில் சீதையின் கருத்தை யுணர்ந்த அனுமன், “இராமபிரானல் அனுப்பப் பெற்ற தூதன் நான்” என்று கூறியவாறே அவளை வணங்கி முன்னே சென்றான். “இராமபிரான் உம்மைத் தேடிக் கண்டு வருமாறு உலகெங்கும் தூதர்களையனுப்பியுள்ளார் ; அவர்களுள் நானும் ஒருவன் நான் நல்வினை செய் துள்ளமையால் உம்மைக் கண்டேன் ; இவண் நீர் இருத்தலை இராமபிரான் அறியார்; அவர் அறிந்திருப்பாராயின் இங்குள்ள அரக்கர்கள் இந்நாள் வரையிலும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்னைக் குறித்துச் சிறிதும் ஐயுற வேண்டாம்; அப்பெருமான் அருளிய அடையாளம் என்பால் இருக்கிறது” என்று கூறி வணங்கினான்.

சீதையின் உயிர் காத்த வீரன்

சீதை அவ்வனுமனை நோக்கினாள். அவளுக்கு இரக்கமும் சினமும் ஒருங்கே எழுந்தன. “என் எதிரில் நிற்பவன் அரக்கன் அல்லன் ; நல்லொழுக்க நெறியில் நின்று ஐம்புலன்களையும் வென்றவனாக விளங்குகிறான் ; இல்லையேல் தேவனாக இருத்தல் வேண்டும்; இவன் உரைகள் நல்லறிவைப் புலப்படுத்துகின்றன; இவன் அரக்கனோ, அன்றித் தேவனோ, குரங்கினத் தலைவனோ, யாவனாயினும் ஆகுக. இவண் எய்தி எம்பெருமான் திருப்பெயரைச் சொல்வி என் உள்ளத்தை உருகச் செய்தான் ; எனது உயிரைக் காத்தான். இதனினும் செய்யத்தக்க உதவி வேறுள்ளதோ ? இவன் உரைகள் அரக்கர்களின் இரக்கமற்ற உரையைப் போன்றனவல்ல ; இவன் யாரென உசாவுதற்குரியன்” என்று உள்ளத்தில் எண்ணி