பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராமன் விடுத்த தூதன்

75

கருத்திலும் வாயிலும் எப்பொழுதும் இருக்கின்றீர்; அங்ஙனமாகவும் பிராட்டி நும்மைப் பிரிந்தார் என்பது பொருந்தியதாகுமோ? நான்முகன் கொடுத்த சாபத்தால் இராவணன் சீதாபிராட்டியைத் தொடுதற்கஞ்சி நிலத்தொடு பெயர்த்தெடுத்துச் சென்றான் , அப்பிராட்டியின் கற்புச் சிறப்பால் தேவ மாதர்கள் யாவரும் மிகுந்த சிறப்புற்றனர்” என்று பலவாறு சீதையின் கற்பு மாண்பினைப் பொற்புற விளக்கினான். ‘இன்னும் ஒரு திங்கள் வரையிலும் உயிரோடிருப்பேன்; அதற்குள் இராகவன் இங்கே வாரா தொழியின் உயிரிழப்பேன்’ என்று கூறிப், பின் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த சூளாமணியை எடுத்து, நும்பால் கொடுக்குமாறு அப்பிராட்டி என் கையில் தந்தருளினர் என அனுமன் உரைத்துச் சூளாமணியை இராமபிரான் கையில் கொடுத்தான். அதனைப் பெற்ற இராமன் களிப்பென்னும் கடலில் மூழ்கித் திளைத்தான்.

இருவகைத் தூதுக்கு ஒருவன்

இங்ஙனம் இராமன் விடுத்த தூதனாய அனுமன் அவ்விராமனைப் பிரிந்த சீதைக்குக் கணவன் விடுத்த காதல் தூதனாகமட்டும் தொண்டாற்றவில்லை. தன் பெருந்தலைவனாகிய இராமன் விடுத்த போர்த்தூதனாகவும் இலங்கை வேந்தனைக் கண்டு, அவனது உள்ளமும் துளங்குமாறு செய்து மீண்டான். அதனாலேயே கவியரசராகிய கம்பர், அவ்வனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று தம் காவியத்தில் போற்றிப் புகழ்கின்றார். எனவே, அவ்வனுமன் தலைமைத் தூதனுக்குரிய தகுதியெல்லாம் பெற்றுச்சிறந்து திகழ்கின்றான்.