பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாண்டவர் விடுத்த தூதன்

77

அறுத்து விடும் கொடுஞ்செயலைப் புரிந்து வந்தார் என்பர். ஆதலின், “குறும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி, எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை” என்று பிற்காலப் புலவர் ஒருவர் பாடினர்.

வில்லி பாரதச் சிறப்பு

இத்தகைய பெருங்கவிஞராகிய வில்லியார் தாம் ‘பிறந்த திசைக்கு இசைநிற்பப் பாரதமாம் பெருங் கதையைப் பெரியோர் தங்கள் சிறந்த செவிக்கு அமுதமெனப் பாடித் தந்தனர். இவர் பாக்கள் சொற்சுவை பொருட்சுவை மலிந்து மிடுக்கான நடைகொண்டு மிளிர்வனவாகும். இவர் தம் காலவியல்புக்கேற்ப மணியும் பவளமுங் கோத்தது போல, வட சொல்லையும் தொடர்களையும் இடையிடையே கலந்து வளம்படப் பாடுவதை இந்நூலிற் காணலாம். வீரச்சுவை, வெகுளிச்சுவை மிக்க கதைப்பகுதிகளில் சுவை கனிந்த சந்தப்பாக்களால் ஓசைகயம் சிறக்குமாறு இவர் பாடியுள்ள திறம் வியக்கற்பாலதாகும்.

பாரதக்கதை அமைப்பு

பாரதம் ஒரு குலத்துதித்த தாயத்தார்களில் ஒரு சாரார் ஒழுகிய அறநெறிகளையும், மற்றொரு சாராரின் மறநெறியான் விளைந்த தீய விளைவுகளையும் விரித்துக் கூறுவது. குருகுல வேந்தர்களாகிய கெளரவர்க்கும் பாண்டவர்க்கும் நிகழ்ந்த சூதுப்போரில் பாண்டவர் தம் அரசுரிமை யாவும் இழந்தனர். கெளரவர் தலைவனாகிய துரியோதனன் நியமித்தவாறே அப்பாண்டவர் பன்னிரண்டாண்டுகள் காட்டில் வாழ்ந்தனர்; ஓராண்டுக் காலம் விராட நகரிலே கரந்துறை வாழ்வை நடத்தினர். அங்ஙனம் பதின்மூன்று