பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. வேலன் விடுத்த தூதன்

தமிழில் சிறந்த புராணங்கள்

நந்தம் செந்தமிழ் மொழியிலுள்ள புராணங்கள் பலவற்றுள்ளும் சிறந்தனவாகத் திகழ்வன ஒன்பது புராணங்கள் என்று ஆன்றோர் உரைப்பர். அவைதாம் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், கோயிற் புராணம், சேது புராணம், காளத்திப் புராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருக்குற்றாலப் புராணம் என்பனவாம். இவ்வொன்பது புராணங்களுள்ளும் மூன்றன. மிகச் சிறந்தனவாகக் கற்றோர் போற்றுவர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்னும் இம் மூன்று நூல்களையும் சிவபெருமானுக்கமைந்த மூன்று விழிகளைப் போன்றவையென்று போற்றி மகிழ்வர். தொண்டர்தம் பெருமையைப் பேசும் திருத்தொண்டர் புராணம் பெரிய புராணம் எனப்படும். சிவகுமாரனாகிய முருகன் பெருமையை விரித்துரைக்கும் கந்தபுராணமோ ‘புராண நன்னாயகம்’ என்று போற்றப்படும்.

கந்தபுராணச் சிறப்பு

பெரிய புராணத்தை யருளிய சேக்கிழார் பெருமான் அப்புராணத்தை ‘மாக்கதை’ என்று சிறப்பித்த வாறே, கந்த புராண ஆசிரியரும் கந்த புராணத்தை ‘அறுமுகம் உடையவோர் அமலன் மாக்கதை’ என்று சிறப்பித்துள்ளார். தில்லைக் கூத்தனாகிய சிவபெருமான், ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் பெரிய புராணம் பாடத் தொடங்கியது போன்றே, கந்தபுராண ஆசிரியரும் காஞ்சிக் குமர.