பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலன் விடுத்த தூதன்

91

கச்சியப்பர் வாழ்ந்த காலம்

இனிக் கம்பரே கந்த புராணத்தைப் பாட இருந்தனர் என்றும், கச்சியப்பர் அதனை முன்னரே பாடியுள்ளார் என்பதை அறிந்து இராமாயணத்தைப் பாடத் தொடங்கினர் என்றும் காது வழிச் செய்தியொன்று வழங்குகின்றது. இது குறித்துக் ‘கச்சியப்பர் என்னும் சுறாவா கந்த புராணக் கடலைக் கலக்கியது?’ என்று கம்பர் வினவியதாகப் பழமொழியொன்று வழங்கும். இதனால் கச்சியப்பர், கம்பர் காலத்திற்குச் சிறிது முற்பட்டவர் என்று கருதலாம். வீரசோழிய இலக்கண விதியைக் கடைப்பிடித்த கச்சியப்பர் அவ் வீரசோழிய காலத்துக்குப் பின்னும், கம்பர் காலத்துக்கு முன்னும் வாழ்ந்தவராதல் வேண்டும்.

கதையமைப்பில் இருநூல்களின் ஒற்றுமை

இவ்வுண்மை கந்த புராணம், இராமாயணம் ஆகிய இரு நூல்களின் கதையமைப்பில் உள்ள ஒற்றுமைகளால் தெள்ளிதிற் புலனாகும். இலங்கையில் இராவணன் நிறுவிய அரசு இராமனது வில்லால் அழிந்தது. வீரமகேந்திரத்தில் சூரன் அமைத்த அரசு முருகனது வேலால் முறிந்தது. இராவணன் நெடுந்தவம் புரிந்து பெற்ற வரத்தாலும் வலிமையாலும் தேவரையும் மூவரையும் வென்றான். மாநில மன்னர், அவன் படைவலி கண்டு அஞ்சி அடி பணிந்தனர். இத்தகைய வீரஞ் செறிந்த வேந்தன் கும்பகருணன் முதலான தம்பியரோடும், மேகநாதன் முதலான மைந்தரோடும் இலங்கையிற் சிறந்து விளங்கினான். வானவர் அந்நாட்டில் வாயடங்கிப் பணிபுரிந்தனர், எங்கும் அறம் தளர்ந்து, மறம் வளர்ந்தது. இவ்வாறே சூரனும் பெருந்தவம் புரிந்து அண்டங்கள் பலவற்றை