பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்மொழி எனப்படுவது மிகப் பழைமை வாய்ந்த இலக்கிய வளமும், வரலாற்றுச் சிறப்பும் உடையதாக இருக்க வேண்டும். தமிழில் காலத்தால் அழிந்தன போக, எஞ்சியவற்றுள் ஈராயிரம் ஆண்டின் முற்பட்ட எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்களும், அவற்றைச் சார்ந்து பின்னர் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆகிய 'சங்க இலக்கியங்கள் மாபெரும் இலக்கியப் புதையலாக, ஆழ்ந்தகன்ற கடல் போல வரலாற்றுச் சிறப்புடன் இன்றும் குன்றாச் சிறப்புடன் பொலிகின்றன. . பழைமையும் சிறப்புமுடைய திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை இரட்டைக் காப்பியங்களாகத் தமிழின் சீர்மையைப் பறை சாற்றுகின்றன. இடைக்காலத்தில் சிந்தாமணியும், தேவார திவ்யப் பிரபந்தங்களும், பிற்காலத்தே இராம காதையும், பெரிய புராணமும், பள்ளு, குறவஞ்சி, பரணி அனைய சிற்றிலக்கியங்களும் தமிழ் இலக்கியக் களஞ்சியங்களாகும். தனிமொழி எனப்படுவது, பிறமொழியின் துணையின்றித் தனித்தியங்கும் வல்லமை பெற்றதாகும். எந்தக் கருத்தையும் எந்தப் பொருள் பற்றியும் எத்துறை பற்றியும் சொல்லக் கூடிய ஆற்றல், அஃதாவது சொல்வளம், சொற் பெருக்கம் உடையதாகத் தனிமொழி இருத்தல் வேண்டும். தமிழிற் சொற் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துணை இலக்கியச் சொற்கள், வாழ்வியற் சொற்கள் நிரம்பியுள்ளன. புதிய புதிய சொல்லாக்கங்களுக்கு வேண்டிய அளவு வேர்ச் சொற்கள், அடிச் சொற்கள் தமிழில் நிரம்ப இருக்கின்றன. மிகப் பழைய ஒரு மொழியில் புதிய கண்டு பிடிப்புகளுக்கான சொற்கள் முன்னரே அமைந்திருக்க முடியாது. ஆனால் அவற்றை உருவாக்கிக் கொள்ளத் தமிழால் முடியும். அருவி என்றும் இருப்பது. கணினி இன்று வந்தது. இரண்டிற்கும் தமிழ்ச் சொற்கள் உள்ளன. முன்னது பழஞ்சொல், பின்னது ஆக்கச்சொல். (அருவியை, நீர்வீழ்ச்சி எனல் வேண்டா; இது மொழி பெயர்ப்பு). . "மோட்டார்' என்பதை 'உந்து' என ஆக்கச் சொல்லால் குறிப்பிட்ட நாம் பேருந்து (பஸ்), சிற்றுந்து (மினி பஸ்), 38 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005