பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பூக்காட்டுத் தும்பி உரை.
"தமிழே, நீயோர் பூக்காடு நானோர் தும்பி" - என்றார் பாவேந்தர் பாரதிதாசனார். யானும் ஒரு தும்பியானேன்.

இறகு முளைத்த தும்பி சுவைக்கும். அறிவு முளைத்த தும்பி ஆர ஆயும்- ஆராயும். தும்பி ஒரு துளி தேனெடுக்க 200 பூக்களிலாவது மேயவேண்டும். அறிவுத் தும்பியும் அவ்வாறு மேவினால்தான் அரிய ஒளிக் கருத்து கிடைக்கும். கிண்டித் துழாவும் தும்பி போன்று கிளரித் தோய்ந்தும் காணவேண்டும்.


"வானவராம் தாமரையின் காடுழக்கும் தும்பி' என்று கம்பர் காட்டும் தும்பி போன்று நுகர்வது மட்டுமன்று, வகிர்வதும் வேண்டும்; உழக்கவும் வேண்டும்.
பூக்காட்டில் தேனுக்குக் குறைவில்லை.

'மனிதராம் புதுப்புனல்மீது - செந்தாமரைக் காடு பூத்தது போலச் செழித்த என் தமி" ழிலும்கலை கட்குக் குறைவில்லை.


அறிவியல் முதலாகப் பல்துறைக் கலைகளும் தமிழில் பொதிந்துள்ளன. ஒவ்வொரு கலைக்கும் தற்காலத்தில் தனித்தனித் துறைகள் தோன்றியுள்ளது. பண்டைத் தமிழ்ப் பனுவல்களில் இவ்வாறு இல்லை. எனினும், அவ்வக் கலைகள் இலைமறை காய்களாக - ஆழ்கடல் முத்துகளாக - வானிடை மீன்களாக - மண்ணிடைப் பொன்னாக - யாழிடை இசையாக மிடைந்தும் செறிந்தும் உள்ளன.

"வண்துடுப்பாய்ப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்
வெண்குடையாம் தண்கோடல்’

- என்பது வெறும் உவமப் பாடல் அன்று. கோடற் பூவின் வளர்ச்சி வரலாற்றை விளக்கும் செடிமப் பாடல்.