பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. உழத்தியர் நெய்தல், ஆம்பல், குவளை, காவி ஆகிய நான்கையும் தனித்தனியாகவும் யாவற்றையும் சேர்த்துக் கட்டிய மாலையாகவும், தழை உடையாகவும் அணிந்தனர். இவற்றின் தண்டுகளை எளிய மக்கள் கைக்காப்பாக அணிந்தனர்.

6. அல்லிப் பொகுட்டில் ஆயிரக்கணக்கான வெண்சிறு கடுகு போன்ற விதைகள் இருக்கும். இவ்வல்லி அரிசியை மக்கள் உணவாக உண்பர். இவ்வரிசி உணவு நெய்ப்போ, கொழுப்போ இல்லாதது; புலன் உணர்ச்சிகளைத் துாண்டாதது; இதனால் கைம்பெண்கள் இதனை அன்றாட உணவாகவோ கொள்வர்.

7. பனியால் தாமரை கருகும்.

8. குறிஞ்சித் தேன் சிறப்புடையது.

9. போர் வீரர்கட்கு அவ்வப் போர்க்குரிய பூ சூட்டப் படும். அதனை மன்னன் வழங்குவான். இது ‘பூக்கோள் நிலை’ எனப்படும்.

10. தினை விதைக்கக் கொல்லையை உழத் தொடங்கு வோர் பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது நொச்சித் தவழ மாலையைச் சூடிக் கொள்வர்.

11. எவ்வொலியும் இல்லாத நள்ளிரவில் நொச்சிப் பூங்கொத்து விழும்.

12. போரில் வெற்றி பெற்றோர் வாகைப் பூவைச் சூடிக் கொள்வர். வாகைப்பூவில் நள்ளிரவில் பிஞ்சு தோன்றி, சில நாழிகைகளில் வளர்ந்து காயாகி விடுகின்றது. மாலையில் பூங் கொத்தில் அடையாளம் காட்டாத பிஞ்சு, காலையில் காயாகத் தோன்றும். அதனால் “மடையானில் குஞ்சையும் வாகையில் பிஞ்சையும் பார்க்கமுடியாது" என்னும் பழமொழி எழுந்தது.

13. போர்ப்புண் பெற்ற வீரன் வீட்டிற்குக் கொணரப் பட்டால் அவனை நோய் மூட்டும் நுண்ணுயிரிகள் தாக்காமலும் பேய் உண்ணாமலும் தடையேற்படுத்த வீட்டின் முகப்பில் வேப்பிலையைச் செருகுவர்.

14. பனை, வேர் முதல் குருத்து வரை எல்லா உறுப்பு களாலும் மாந்தர்க்குப் பயன்படும் ஒன்று.