பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யியல், உயிரியல், மண்ணியல், செடிகொடியியல், வானியல், கலையியல், போரியல், மனையியல், கடலியல், பூதவியல், தொழிலியல், அரசியல், ஆடியல், ஒப்பனையியல், இசையியல், மருந்தியல், பொறியியல், மொழியியல், பொதுவியல் என வருஉம் பலதுறைக் கருத்துக்களும் சங்கப் பாடல்களுக்கு இலக்கியக் கட்டுமானங்களாயின. பாவின் பாடுபொருளுக்கு இவ்வெல்லாம் ஊடு பொருளாயின. கற்பவர்க்குப் பல்துறையறிவு இருந்தாலன்றிச் சங்கவிலக்கிய முழுமை விளங்காது. ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடன்' என்ற ஒரு குறுந்தொகையடியை விளங்கிக்கொள்வதற்கே சில துறையறிவுகள் வேண்டுமே.


சங்கப் பனுவல்களும் பெருங்காப்பியங்களும் தெய்வக்காதற் பாசுரங்களும் அகம்பாடும் துறைச்செய்யுட்களும் இயற்கைப் பின்னல் உடையவை. "வெயில் நுழைபறியாக் குயில் நுழை பொதும்பர்' என்ற மணிமேகலையின் ஒரடி போதும் தமிழிலக்கியம் பூக்காடு என்பதற்கு அந்த இலக்கியத் தமிழ்ச் சோலையை அணு அணு வாக உணர்தற்கும் அணியணியாக நுகர்தற்கும் கவிஞர்கோ கோவை. இளஞ்சேரன் நமக்கு ஒரு புதிய இலக்கியக் கண்ணாடியை வழங்கியுள்ளார். நுண்மாண் நுழைபுலம் என்பதற்கு இந் நூல் ஓர் எடுத்துக்காட்டு.


பூக்கள் உலக மறைகளிலும் அயற்காவியங்களிலும் நாகரிகங்களிலும் பழக்க வழக்கங்களிலும் இடம்பெற்றிருக்கும் சிறப்பினையும் தொல்காப்பியத்தும் அகத்தும் புறத்தும் தமிழர் வாழ்