பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


மரப்பூ. நெய்தல் நீர்ப்பூ. இவ்வாறமைந்த இவ்வடிப்படையை வைத்தே பூவகைகளைப் பிற்காலத்தவர் கோட்டுப்பூ, கொடிப்பூ. நிலப்பூ, நீர்ப்பூ என வகைப்படுத்தினர். இந்நான்கு மலர்களைத் தேர்ந்ததில் மற்றொரு தேர்வும் அடங்கியுள்ளது. அது நிறத்தேர்வு. நிறத்தால், குறிஞ்சி - செம்மை (ஐந்து வண்ணங்களில் ஒன்று) முல்லை - வெண்மை மருதம் - பொன்மை நெய்தல்- நீலம். மலர்களில் இந்நான்கு நிறங்களே மூலங்கள். பிறவெல்லாம் இவற்றின் திரிபுகளும் கலப்புகளுமேயாகும். இவ்வகையில் நானில-உலக-மலர்களின் நிறங்களையெல்லாம் அடக்கிய தேர்வாக இந்நான்கு மலர்த்தேர்வு அமைந்துள்ளது. இயற்கை நிலங்களாகிய இந்நான்கு வகை நிலங்களைக் கண்டு மலர்ப்பெயர் சூட்டிய தமிழர் செயற்கை நிலமொன்றையும் கண்டு அதற்கும் மலர்ப்பெயரையே சூட்டினர்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறு"52 க்கும் கடுமையும் கொடுமையும் கொண்ட வன்மை நிலத்திற்கும் மென்மை மலராம் பாலை மரத்தின் மலர்ப்பெயர் கொடுத்துப் "பாலை" என்றனர்.

இருநிலங்கள் திரிந்து உருவான இந் நிலத்திற்குரிய பாலை மலரும் வெள்ளையும் சாம்பல் நிறமுங் கலந்த இரு வண்ண மலராக அமைந்தது.

மலரால் நிலங்கள் பெயர் சூட்டப்பட்டன. இதற்கேற்ப மக்கள் வாழ்வில் நிகழும் காதல் ஒழுக்கமாம் அக உணர்வுகள் ஐந்தாக அமைய, அவையும் முறையே, 52 சிலம்பு: காடுகாண்: 64,65