பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/729

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. மஞ்சாடி வகை மலர்.

போங்கம்.

'போங்கம்' என்னும் சொல்லே அரிய சொல். குறிஞ்சிப் பாட்டில் மட்டும் இச்சொல் உளது. இதன் தொடர்பில்தான் ஒன்றிரண்டு அகர முதலிகள் இச்சொல்லைக் குறித்துள்ளன. 'போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி' - எனக் கபிலர் இதனைப் பாடியுள்ளார். நச்சர் முன்னே உள்ள போங்கத்தை “மஞ்சாடிப் பூ' என்றார். அடுத்துள்ள திலகத்தை "மஞ்சாடி மரப் பூ” என்றார். அடுத்தடுத்து இவ்வாறு அவர் எழுதியுள்ள தால் இஃது அமைதி காணற்குரியதாகின்றது. மஞ்சாடியில் இருவகை இருந்து இவ்வாறு வேறுபாடு கொள்ளப் பட்டிருக்கும். இச்சொல்லை அமைத்துக்கொண்ட அகர முதலிகளும் 'மஞ்சாடி மரவகை" என்றே பொருள் எழுதின. பரிபாடல் திரட்டுப் பாடலில், வேங்கை, மராம், மகிழம், பிண்டி மலர்களுடன் நிவந்து சேர் போங்கி' எனப் போங்கி’ என்றொரு மலர் குறிக்கப்பட்டுள்ளது. இப்போங்கி போங்க மாகலாம். போங்கம் மஞ்சாடி வகையானாலும் செடியன்று. 'நிவந்து சேர்' என்னும் அடைமொழியால் உயர்ந்த மரமாகும். இப் பூக்களைக் கொண்டது 'மணி நிறங்கொண்ட மலை’ என்றிருத்தலால் இது மலை நிலப் பூ ஆகின்றது. சொல்லால் அரிய நிலைமட்டுமன்றிச் செடியியலிலும் இதன் பெயர் குறிக்கப்படவில்லையாதலால் அவ்வகையிலும் அரிய பூவாகின்றது. அறியும் அளவில், போங்கம் பூ, குறிஞ்சி நிலப் பூ. கோட்டுப் பூ. திலகமாம் மற்றொரு மஞ்சாடி மலர்க்குரிய பருவ மாகிய வேனில் இதன் பருவமாகலாம். நிறங்காண இயலாத அரிய மலர். - 1 குறி, பா : 14. 2 பரி. திரட்டு 1 : 8.