பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41


கடவுளர் பூ

மக்கட்கும் மன்னர்க்கும் பூவைச் சின்னமாக அமைத்த தமிழர், கடவுளர்க்கும் இன்ன இன்ன மலர் என்று அமைத்தனர். அதனைக் கடவுளுக்கு விருப்பமாகாது என்றனர். கடவுள் விருப்பு வெறுப்பற்றவர் என்று கூறிக்கொண்டே தம் விருப்பத்தை அவர் விருப்பமாக்கி விருப்பமான மலரை அமைத்தனர். சில பச்சிலைகள் நறுமணம் கமழ்பவை. மணம் கருதி அவைகளையும் மலர்களாகக் கொண்டு கடவுளர்க்கு விருப்பமாக்கினர்.

சிவபெருமானுக்குக் கொன்றை,
திருமாலுக்குத் துளசி,
முருகனுக்குக் கடம்பு,
பிள்ளையார்க்கு அறுகு,
அருகனுக்கு அசோகு,
புத்தனுக்குத் தாமரை,
உமைக்குக் குவளை,
திருமகட்கு ஆம்பல்,
கலைமகட்கு வெண்டாமரை,
காளிக்குச் செவ்வலரி,
இந்திரனுக்கு மந்தாரம்,
கதிரவனுக்குத் தாமரை

-என விருப்பமலர்களாகச் சாற்றித் திருவடிகளில் படைத்தும் தூவியும் வழிபட்டனர்; அணிவித்தும் சூட்டியும் தொழுதனர். இவைகளை விருப்ப மலர்கள் என்றாலும், இவை கடவுளர்க்கும் சின்னப் பூக்களேயாகும். இதனை,

"சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல்
வெண்மதியம் சேர்த்தினானே"73

-என்னும் அப்பர் தேவாரமும் அறிவிக்கின்றது.

கண்ணியும் தாரும் சின்னப் பூக்களாகக் கொள்ளப்பட்டமை கண்டோம்.

.


78, அ. தே : தாகை: திருத்தான் : 4