பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


இருக்கை: இரு என்றால், அமர்ந்திருத்தல், கை என்றால் ஒழுக்கம், இரு என்றால், நிற்கும்போது, நடக்கும்போது உட்காரும்போது ஒழுங்காக இரு. அதாவது, நிமிர்ந்து இரு என்பதாக அர்த்தம். அந்த இருக்கை தான் ஒருவருக்கு செம்மாந்த தோற்றத்தையும் சிறப்பான தோரணையையும் அளிக்கிறது.

உடுக்கை: இன்று நாம் உடை என்கிறோம். அன்று உடுக்கை என்றனர். உடுத்துவதை ஒழுங்காக ஆபாச மில்லாமல் உடுக்க வேண்டும் என்றே உடுக்கை என்றனர்.

படுக்கை: அது போலவே ஒழுங்காகப் படுத்து உறங்க வேண்டும். கன்னாபின்னா வென்று படுத்திருத்தல் ஒழுக்க மற்ற செயல் என்று கருதியே படு+கை என்றனர்.

இவ்வாறு நடக்கை இருக்கும் போது தான் நமது உடலாகிய யாக்கை இளமை குறையாமல் முதுமையை வேகமாக அடையாமல் பதமாக இருக்கும், இதமாக இருக்கும் என்றார்கள்.

நாம் இயல்பாக இனிதாக நினைவுகளுடன் இயங்குவதை இயற்கை என்றும், அதாவது இயற்கைப் பொருட்களான சூரியன், சந்திரன், காற்று, மழை போன்றவை ஒழுங்காக இயங்குவது போல நாமும் நமது அன்றாட செயல்களில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று தான் இயல் + கை, செயல் + கை, என்றும் சொல்லி சொல்லி நினைவு படுத்தினர்.

இப்படி ஒழுங்காக நடந்து கொள்கிறபோது தான், நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது என்பதைக் குறிக்கத்தான் வாழ்க்கை (வாகை, கை, வாழ்) என்று சொன்னார்கள்.