பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சதைத்திரள், பார்வைக்குக் கவர்ச்சி, தோற்றத்தில் அழகு, தோரணை பேசுவதற்கும் பெருமையான அமைப்புடன் இருக்கிறான்.


அப்படிப்பட்ட உடம்பு வரவேண்டும் என்றால், புத்தகம் படித்தால் மட்டும் வராது. புகைப்படம் பார்த்துக் கொண்டேயிருந்தால் வந்து விடாது.


தினம் தினம் செய்து பழகி, பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். தினம் செய்வது பழக்கமாகிறது. பழக்கம் வழக்கமாகிறது.


வழக்கம் ஒழுக்கமாகிறது. ஒழுக்கம் வாழ்க்கையின் உயிர் நாடியாகி உயர்த்துகிறது.


அதனால்தான் வள்ளுவர் பாடினார் இப்படி

ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.


இங்கே ஒழுக்கம் என்பது நல்ல பண்புகள், நல்ல நினைவுகள், நல்ல செயல்களைக் குறிப்பதாகும் ஒழுக்கம் உடைய ஒருவனே உடலை அழகாக வளர்க்க முடியும். ஆற்றலைப் பெருக்க முடியும். ஆண்மையில் திளைக்க முடியும். எல்லோரையும் விட மேம்பட்டுத் திகழ முடியும்.


இப்படிப்பட்ட ஓர் இனிய நிலையை எய்திட பயில்பவனைத் தான், பயில்வான் என்றனர். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு நிலை கல்வி பயில்பவனுக்குக் கிடைக்காமற் போனதும் ஒரு காரணமாகிவிடவே, பயிற்சி என்பது தேகத்திற்கு மட்டுமே பொருந்துகிறது என்பதால், உண்மையாக பழகுபவனே, தொடர்ந்து பழகுபவனே, ஒழுக்கமாகப் பழகுபவனே, பயில்வான் என்று பெருமையாகப் பேசினார்கள்.