பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பயன்பெற வேண்டும் என்பதற்காக, மக்களே விரும்பி, முனைந்து, முயற்சித்து வளர்க்கின்ற மரங்கள் மற்றொன்று.

பொதுவாக மரங்கள் எல்லாமே நிழல் தருவனவாக, கனி கொடுப்பனவாக, விறகுகளை வழங்குவனவாக, இருக்கின்றன.

ஆரம்பமும் மரமும்

ஆரம்ப காலத்தில் ஆர்வம் காட்டி மரங்களை வளர்க்கிற மக்கள் கூட, மரம் வளர்ந்து விட்ட பிறகு அதைப் பேணிக்காக்கும் பொறுப்பேற்பதில்லை. தண்ணீரும் எருவும் வேலியும் தராமலேயே, வளர்ந்த மரத்தைப் பயன்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக மட்டுமன்றி அதில் கெட்டிக் காரர்களாகவும் விளங்குகின்றார்கள்.

ஆகவே மரம் என்றால், பயன்படுகிற ஒரு பொருள். காக்கப்படவேண்டியது அல்ல என்கிற கோட்பாடுதான் மக்களிடையே விளங்கும் தலையாய கொள்கையாக இருக்கிறது.

மரமும் இடையரும்

சாலை ஓரங்களில் எல்லாம், வரிசை வரிசையாக மரங்களை நட்டு, வளர்த்து, ராணி மங்கம்மாள் எனும் பெண்ணரசி ஒரு சரித்திரத்தையே படைத்துவிட்டுப் போனாள்.

அந்த மரங்கள் வழிப் போக்கர்களுக்கு நிழலைத் தந்து ஆறுதலை அளித்தன. ஆனந்தம் விளைத்தன. அகால நேரத்தில் ஏற்பட்ட பசியையும் போக்கின.

ஆனால், அந்த மரங்களின் இலை தழைகள் எல்லாம், ஆடுமாடுகளுக்கு இரையாகிப் போகக் கூடிய வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன.