பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பயன்தரும் வல்லமையில்லாத இருந்தும் வல்லமை யிழந்து போகிற மரங்களை, மக்கள் மதிக்கமாட்டார்கள். அவற்றை வெட்டி வீழ்த்தவே, சமயம் பார்த்திருப்பார்கள். சந்தர்ப்பங்களை உண்டு பண்ணிக் கொள்வார்கள்.

அது போலவே, நல்ல தேகம் இல்லாத மக்களை வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன் இல்லாத மக்களை, யார் மதிப்பார்? யார் வரவேற்பார்?

அவர்களை நாற்றமெடுத்தப் பொருட்களைப் பார்க்கும் பொழுது மேற்கொள்கிற முகச் சுளிப்புடன்தான் பார்ப்பார்கள். முடிந்தால், அந்த இடத்தை விட்டு அகற்றவும், அல்லது அவர்களே அகன்று போகவும் தான் செய்வார்கள்.

இது தேவையா!

ஆராய்ந்து பெறுகிற அறிவுத்திறன் உடைய மக்களுக்கு இந்த நிலை அவசியமா?

பொன்னாக உடலைப் போற்றிக் காக்க வேண்டாமா!

தேகத்தைத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்வோம். தேய்ந்தாலும், நலிந்தாலும், அந்த வேகத்தில் தேற்றிக் கொள்ள முடியும் என்று மருந்தை மனதில் கொண்டு பேசுவோரே அதிகம்.

மருந்தை விருந்தாக உண்ணும் மதியிலிகளை, நாம் என்ன சொல்லி மாற்ற முடியும்? வெளி உலகுக்கு வாழ்பவர் போல நடித்து, உள்ளும் புறமும் உடலால் வேதனைகளை அடைந்து கொண்டு, முணுமுணுத்து வாழ்பவர்களே இன்று அதிகமாக இருக்கும் இந்நாளில், இந்த உண்மையை வலியுறுத்துவது நமது கடமையாகி விடுகிறது.

நோய் மலிந்து நொந்து வாழ்கிற வாழ்க்கையை, ஒரு உவமையுடன் நாம் காணலாம்.