பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

51


தன்னிடம் வருகிற பொருளின் சுவையை வெளிப்படுத்தி, மேலும் மேலும் வேண்டும் என்று வெறியூட்டுகின்ற வாய்ச் சுவையை, நமக்கு நாக்கு கொடுத்து விடுகிறது.

இந்த நாவின் புலி வேகமும், வாயின் சுவை வேகமும் சேர்ந்து கொண்டு, உண்ணும் உணவின் அளவை மிகுத்துவிடுகிறது.

வயிறு நிரம்புவது தெரியாமல், வாய் உணவுகளை நிறைய வயிற்றுக்குள் செலுத்தி விடுகிறது. நாவின் தூண்டுதலால் தான் இந்த நிரப்பும் நாடகம் நிதமும் நடைபெறுகிறது.

வாயில் தொடங்கி, வயிற்றின் இறுதி வரை உள்ள இந்த ஜீரண மண்டலத்திற்குரிய நீளம் ஏறத்தாழ 27 அடி. அதாவது, திருவாயிலிருந்து தொடங்கி, கடைசியாக முடிகிற எருவாய் வரை உள்ள இந்தப் பரப்பில், தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என்றெல்லாம் பெயர் பெற்ற சிறப்பான உறுப்புக்கள் இருக்கின்றன.

இந்த ஜீரண மண்டலத்திற்குள்ளே இரத்த ஓட்டமும், இன்னும் பல நிண நீர் ஓட்டமும், ஜீரண சுரப்பிகளின் நீரோட்டமும், நிறையவே நடைபெறுகின்றன.

நாக்கின் சுவையறிய, சுகம் தெரிய, உணவை வயப்படுத்த, ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் அளவுக்கு உடலில் உமிழ் நீர் சுரக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


இப்படிப் பட்ட புலிவேகமும் புயல் வேகமும் உடைய நாக்கை, கட்டுப்படுத்தாதவர்களுக்குக் கஷ்டங்கள் நிறைய வரும்.