பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

65



மிக மிக அருமையானவரி. மேன்மையான வரி அது!

பானையில்லாமல் சமைக்கப் பார்க்கும்
பூனை குணத்தவர் பெருமை பெறுவரோ

என்று நான் பாடிய கவிதையையும் இங்கு நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அதிசயப் பானை

உடல் என்பதும் ஒரு வகையில் பானைதான்.

இந்தப் பானைக்குள்ளே பற்பல அதிசயங்கள் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த அதிசயப் பொருள், நாம் சுவைக்கவும், மகிழ்ச்சியால் திளைக்கவும் பயன் படுத்திக் கொள்கிற போதுதான், வாழ்வுக்கே ஓர் அர்த்தம் புரிகிறது. வருகிறது.

பானையைப் பக்குவமாக, பயனுள்ள முறையில், பயன்படுத்திக்கொள்ள நல்ல நோக்கமும், நயமான வழிமுறைகளும் இருந்தால் தான் முடியும்.

என்றாலும், நாம் சற்று இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!

பானை என்பது உடலாக,
அடுப்பு என்பது ஆடுகளமாக,
தண்ணீர் என்பது - இலட்சியமாக
அரிசி என்பது - திறமையாக,
அனல் என்பது - உழைப்பாக,
விறகு என்பது முயற்சியாக,
சமைக்கும் தொழில் என்பது - தன்முனைப்பாக
சாதம் என்பது சாதனையாக

நாம் ஒற்றுமைப் படுத்திப் பார்க்கிறபோது, உயர்ந்த உண்மையானது நம் உள்ளத்தில் வேரூன்றிக்கொள்கிறது.