பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா




பல மாயாசக்திகளை வெளிப்படுத்தும் மாயப்பை, ஆமாம். நமக்கு உதவுதற்காக உருவான சகாயப்பை.


இப்படிப்பட்ட காயமானது. நாம் எதிர்பார்த்து வந்த தல்ல; இனாமாக இறைவன் அனுப்பிவைத்த இன்பப் பரிசு. இந்த பரிசை அறிவோடு பெற்றுக் கொண்டு நன்றியோடு காத்துக்கொள்வதுதான் உயிரினங்களில் மேம்பட்ட மனிதர்க்கு அழகு.


ஆனால், காயம் என்பதை நாம் கருத்தில் கொள்வதுமில்லை. கவனத்தில் வைப்பதுமில்லை. அதை அஜாக்கிரதையாகப் பயன்படுத்துகிறோம். அடிமைபோல வேலை வாங்குகிறோம். வேண்டாத பொருளைப் போல, விலக்கியும் வைத்து விடுகிறோம்.


வலி என்று வந்தால் தெரிகிறது. நோய் என்று படுத்தால் புரிகிறது. வேதனை என்றதும் துடிக்கத் தெரிகிறது. உயிர் போகப்போகிறது என்றதும் ஓடோடி வைத்தியம் செய்து கொள்ள அலைகிறது.


ஆனால், நன்றாக உடல் இருக்கும் போதே. உடலை மேலும் நன்றாகக் கவனிக்க வேண்டும். காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற போது, அந்த மனிதனுக்கு தெய்வகுணங்கள் வந்து விடுகின்றன.


தன்னை நினைக்கத் தெரிந்த மனிதன், தன்னை மதிக்கக் கற்றுக் கொள்கிறான். ஆமாம்! அங்கு அகங்காரம் குறைவடைகிறது. மற்றவர்களைப் பற்றி மரியாதையாக நினைக்கவும் மாண்புடன் மதிக்கவும் கற்றுக்கொள்கிறான். இல்லை, அப்படிப்பட்ட அரிய பண்புகளை எளிதாகப் பெற்றுக்கொள்கிறான்.


ஆகவேதான், தேகத்தை தெய்வம் வாழும் திருக்கோயில் என்று புகழ்ந்தனர். ஊன் உடம்பு ஆலயம் என்று போற்றினர்.