பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


நாம் சுவாசம் விட மறந்தாலும், மற்றவர்கள் அதை முனைப்புடன் நிறுத்திவிட்டாலும், உடலுக்கு உடனே மரணம் வந்து விடுகிறது.

உயிர்க்காற்று உடலுக்குள் இருக்கிற வரை அது சுகம். உயிர்க்காற்று உடலை விட்டு ஓடி விட்டால், அதன் பெயர் சவம்.

சுகமான ஒரு சூழ்நிலையைத் தோற்றுவிப்பது சுவாசம். இதற்கு ஏன் இப்படி பெயர் வந்தது? சுவாசம் என்ற சொல் தமிழ்ச் சொல்தான் என்றாலும், இது 'ஸ்வவாசம்' என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. 'ஸ்வ' என்றால் 'Self' என்று, அதாவது தானே என்பதாக அர்த்தம்.

தானே செய்கிற காரியம் அதாவது தானே வாயுவைத் தேடி, சுவாசிக்கின்ற செயலைச் செய்வதால்தான், இதற்கு சுவாசம் என்ற பெயர் வந்தது.

சுவாசம் என்ற சொல்லுக்கு 'நல் மணம்' என்றும், 'உயிர்ப்பு' என்பதும் பொருளாகும்.

உயிர்ப்பு என்றால் என்ன? சோர்வு நீங்கி, புதுப் பலம் அடைவதைத்தான் உயிர்ப்பு என்றனர். அப்படியானால், சுவாசம் என்பதற்கு சுகம் தரும் செயல் என்ற பொருளும் உண்மை தானே.

மக்கள் அனைவரும் சுவாசிப்பது உண்மை தான். என்றாலும், அது அவர்களை அறியாமலேயே நடைபெறுகிறது. அதை 'அனிச்சை செயல்' என்பார்கள்.

கும்பலிலே சிக்கிக் கொள்கிறபோது, மூச்சுத் திணறல் ஏற்படுகிற போது, ஆஸ்த்துமாவால் அவதிப்படுகிறபோது தான், சுவாசத்தின் பெருமை நமக்கு விளங்குகிறது.