இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திருமுருகாற்றுப்படை 19
- இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டுநின்ற தலை மகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோற்ற நலம்பாராட்டியது" என்ற அகத்துறையிற் பாடிய பாட்டு. இதனைத் தருமியென்னும் பிரமசாரிக்கு ஆலவாயிற் சோமசுந்தரக்கடவுள் சிந்தா சமுத்தியாகப் பாடியளித்து, அவன் பொற்கிழி பெறும்படி செய்தாரென் றும், இப்பாட்டிற்குக் குற்றங் கூறத்துணிந்த நக்கீரரைத் தண்டித்துப் பின் அருள் புரிந்தாரென்றும் ஒரு புதுவரலாறு புறப்பட்டுவிட்டது. நக்கீரர் தாமே எழுதியதெனப்படும் இறையனார் களவியலுரையில் இச் செய்யுளைக் குறித்துத் தலைமகளைப் புகழ்ந்து நயப்புணர்த்திற்றாயிற்றுப் போந்த பொருள்' (பவானந்தர் கழகம் 2-ம் பதிப்பு. பக். 49-50) எனக் காணப்படுகின்றது. இங்ஙனமிருப்பவும் இந்நக்கீரரை யுளப்படுத்தி மேற்சுட்டிய வரலாறு எழுந்தது வியப்பே யாகும். இவ்வரலாற்றின்கண் நக்கீரர் சங்கறுக்கும் குலத் தினரென்று சொல்லப்படுகிறது.
இவ்வரலாறு கல்லாடம் முதலிய ஒருசில நூல்களில் நக்கீரரை யுளப்படுத்தாது வழங்கியுள்ளது. உதாரணமாக, பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்குவை தருமிக் கற்புட னுதவி எனக் கல்லாடத்தில் வந்துள்ளது (1,10-12). திருநாவுக்கரசு சுவாமிகளும், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண் (6, 76, 3) என்று கூறியுள்ளார். இவ்வடிகள் தருமியின்பொருட்டு இறைவனே புலவனாகச் சங்கமேறிப் பாடியருளினானென்று