________________
22 இலக்கிய தீபம் வேண்டும். 'தமிழறியும் பெருமாள் 'கதை' என்று இக் காலத்து வழங்கும் நூலில் மேலைச் செய்யுள் சிறிது வேறு பாட்டுடன் நக்கீரர் கூறியதாக அமைந்துள்ளது. இதுவும் எனது ஊகத்தை வலியுறுத்துகிறது. யாப்பருங்கல விருத்தி யில் இச் செய்யுள் பயின்று வருதலினாலே தமிழறியும் பெருமாள் கதையைப்போன்றதொரு கதை சுமார் கி.பி. 10-ம் நூற்றாண்டளவில் வழங்கிவந்ததெனக் கொள்ளலாம். இவ் வரலாறுகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் தோன்றி நக்கீரரது பெருமை யையும் புகழையும் வளர்ப்பனவாயின. இவற்றுள் ஒன்றே னும் அவரது உண்மைச் சரிதத்தோடு தொடர்புடையதெனக் கொள்ளுதற்கில்லை. இனி நக்கீரர்பெயரால் வழங்கும் நூல்களையும் செய்யுட் களையும் நோக்குவோம். அவை வருமாறு: 1 அகநானூறு: 17 செய்யுட்கள் (36, 57, 78,93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389) குறுந்தொகை 8 செய்யுட்கள் (78,105,131, 143, 161, 266, 280, 368) நற்றிணை: 7 செய்யுட்கள் (31,86,197, 258,340, 358, 367) புறநானூறு: 3 செய்யுட்கள் (56,189,395) 2 பத்துப்பாட்டு : நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை 3 கைலைபாதி காளத்திபாதி அந்தாதி 4 திருவீங்கோய்மலை யெழுபது 5 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை 6 திருவெழுகூற்றிருக்கை