பக்கம்:இலக்கிய தீபம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆராய்ச்சிக்குரிய ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து வேறுபாட்டிற்கு இடமிருத்தல் இயல்பே, பேராசிரியர் அவர்களின் ஆராய்ச்சி முடிபுகள் பற்றியும் அபிப்பிராய பேதம் கொள்வோர் உண்டு. ஆனால், அங்ஙனம் மாறு பட்டுரைப்போர் யாரும் இதுவரை தக்க காரணங்களோ ஆதாரங்களோ காட்டி மறுக்கவில்லை. எந்த விஷயத்தை யும் விருப்பு வெறுப்பற்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து, உண்மையெனத் தாம் நன்கு தெளிந்த பின்பே அதனை வெளியிட முன்வருவது பேராசிரியரவர்களின் இயல்பு. இதன் உண்மையை, மெய்ப்பொருள் காண வேண்டு மென்ற நோக்கோடு இந்நூலைக் கற்பவர் யாரும் நன்கு உணர்வர் என்பது திண்ணம், ஆராய்ச்சிகளை மிகத் தெளிந்த நடையில், கருத்துக்க ளெல்லாம் செவ்விதின் விளங்க எழுதியுள்ளமை மிகவும் போற்றத் தக்கதாம் ; கருத்தின் தெளிவு உரை நடையில் நன்றாகப் பிரதிபலிக்கிறது. பேராசிரியர் அவர்களின் தமிழ் - உரைநடையில் தெளிவும் இனிமையும் எங்கும் ததும்புகின்றன. ' இலக்கிய தீபம்' இதுவரை வெளிவாராத புத்தகம். இதனை முதன் முதலில் வெளியிடும் பேற்றை எங்களுக்கு அளித்த பேராசிரியர் அவர்களுக்கு எமது நிலையத்தின் நன்றியும், வணக்கமும் உரியவாகுக. இதுபோன்று பேரா சிரியர் அவர்கள் எழுதியுள்ள இலக்கிய ஆராய்ச்சி, மொழிஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி முதலிய பிற நூல்களையும் அடுத்து ஒவ்வொன்றாக வெளியிட எண்ணியுள்ளோம். தமிழன்பர்களின் ஆதரவு எங்களுக்கு உற்ற துணையாய் உதவும் என்று நம்புகிறோம்.

  • இலக்கிய தீபம்' தமிழன்னையின் திருக்கோயிலில் நந்தா விளக்காய் நின்று என்றும் ஒளிர்வதாக,

பாரி நிலையத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/4&oldid=1452590" இலிருந்து மீள்விக்கப்பட்டது