பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ளன. இந்நூலில் காணும் கடவுள் வாழ்த்துப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனரால் பாடப்பட்டது. இந் நூலிலே காணும் நானுாறு பாடல்களிலே ஐம்பத்தொன்று பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சில புலவர்கள் அவர்கள் பாடிய பாடல்களினால் பெயர் பெற்றுள்ளனர். பொருள்வயிற் பிரிந்த தலைவன் ஒருவன் நடுவழியில் தலைவியைப் பற்றி எண்ணுகின்றான். தலைவியினிடத்துக் கொண்டுள்ள அன்பு அவனை வீடு திரும்புமாறு தூண்டியது; வாழ்க்கையினை வளம் பெறச் செய்ய பொருள் வேண்டும் என்ற எண்ணம் அவனை முன்னே செலுத்தியது. இவ்வாறு உள்ளத்தில் போராட்டம் நிகழவே தலைவன் செய்வது ஒன்றும் அறியாது வருந்தினான். இதனை விளக்க வந்த நற்றிணைப் புலவரொருவர் தேய்ந்த புரியையுடைய பழங்கயிற்றின் இரு புறங்களையும் வலிய இரு யானைகள் பற்றி இழுப்பதுபோலத் தலைவன் உணர்ச்சியும், அறிவும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு வருந்தினன் என்று சிறந்ததொரு உவமை வாயிலாகப் பாடிய காரணத்தால் தேய்புரிப் பழங் கயிற்றிஞர்' என்று வழங்கப்பட்டார்.

  நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் எண்வகைச் சுவைகள் நிரம்பியனவாகும். மந்தி கடுவனோடு விளையாடுதல், பிடி தன் கன்றைப் புலினியின்று காத்தல், மலைப்பாம்பு யானையைச் சுற்றி நெருக்குதல் போன்ற இயற்கைக் காட்சிகள் புலவர்களால் நன்கு சித்திரிக்கப்பட்டுள்னன.
 ஒரு மனிதனுடைய சிறந்த செல்வம் எது என்பதைப் பின்வரும் நற்றிணைப் பாட்டு நயம்படக் கூறுகின்றது.
      "நெடிய மொழிதலும், கடிய ஊர்தலும் 
       செல்வம் அன்று ; தம்செய் வினைப்பயனே 
       சான்றோர் செல்வம் என்பது; சேர்ந்தோர்
       புன்கண் அஞ்சும் பண்பின் 
       மென்கண் செல்வம், செல்வம் என்பதுவே."