பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123 கம் பத்தினை அசைக்கும் யானைபோல நிற்கும் நாவாய்களின் மேல் கட்டிய கொடிகளும், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பொரிக்கும் முற்றத்தினையும், தெய்வத் திற்குக் கொடுக்கும் பலியினை புடைய வாசவினையும் உடைய கள்ளுண்பார் பலரும் செல்லும் மனைகளில் கள்ளின் விலைக்கக் கட்டின கொடிகளும் பட்டினமெங்கும் காணப்பட்டன. இவ்வாறு வண்ணக்கொடிகள் வகைவகையாக அமைந்து வானை எட்டியும் நகரை வளைந் தும் நிழலைத் தந்தன. இதனால் ஞாயிற்றின் கதிர்கள் பட்டி னத்தின் உள்ளே நுழைய முடியவில்லை. பொருள்வளம் கடலின் வழியாக வந்த நிமிர்பரிப் புரவியும், கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும், தென் கடல் முத்தும், குண கடல் பவளமும், கங்கையாற்றில் உண்டாகிய பொருளும், கடாரத்தில் உண்டான நுகரும் பொருளும், சீன முதலிய இடங்களினின்று வந்த கருப்பூாம்,பனிநீர், குங்குமம் முதலிய வேறு பல அரிய பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி வந்து குவிந்தன. சுருங்கக் கூறின் பட்டினத்தின் தெருக்கள் பல அரிய பெரிய பண்டங்களைக் கொண்டு விளங்கின: அத்துடன் அத்தெருக்களில் சோனகர், சீனர் முதலிய பல மொழி பெருகிய மக்கள் பண்புடைய பட்டின மக்களோடு: பழகித் திரிந்தனர். இதனை ஆசிரியர், "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன் னுங் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென் கடன் முத்துங் குணகடற் றுகிருங் கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துணவுங் காழகத் தாக்கமு மரியவும் பெரியவு நெளிய வீண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்' என்று அழகுறக் கூறியுள்ளார்.