பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

உருவாகின்றன. இரண்டும் ஒன்றினை ஒன்று சார்ந்தவை" என்று ராபர்ட்லிடல் (Robert Lidel) கூறுகிறார். டாக்டர் மு.வ.வும் பாத்திரங்களின் இயக்கத்திலேயே கதைப் பின்னலை உருவாக்கிச் செல்கின்றார்.

டாக்டர் மு. வ.படைத்துள்ள பாத்திரங்கள் அன்றாடம் நம்முடன் வாழும் உலகத்து மக்களேயாவர். குற்றங்குறையே இல்லாத அசாதாரண மனிதர்களை அவர் காட்டவில்லை.உயிரும் உடம்பும் கையும், காலும், அகமும் முகமும் படைத்து உலவும் சாதாரண மனிதர்களேயே காட்டுகிறார், அறிவு நுட்பம் பெற்றுள்ள பாத்திரங்களைக் கூட உலகத்தாரிடம் பொதுவாகக் காணப்படும் பலவீனங்களையும் குறைபாடுகளையும் உடையவர்களாகவே அவர் படைத்துள்ளார்.அதனால் அவருடைய நாவலைப் படிக்கும்போது நாம் அதில் வரும் பாத்திரங்களில் ஒருவராகி விடுகிறோம்.நம் இதயத்தோடு இதயம் ஒட்டி அவர்களை உணர்கிறோம்.அவர்கள் விடும் மூச்சு நமக்குக் கேட்கிறது. அவர்களுடைய கோபதாபங்களைப் பரிவுடன் நாம் அறிந்து கொள்கிறோம். "செந்தாமரை”யில் வரும் செய்தி இதழ்த் துணையாசிரியனாகிய மருதப்பன் நல்லவன்; மனச் சான்றைக் கொல்லாதவன். மனச் சான்று பண்படும் முறையில் வாழ்க்கை நடத்தியவன்; சிறந்த அறிஞன்.எனினும்,தனக்குத் திருமணமாகி,குழந்தை இருந்தும் திலகத்தைத் தனியாகக் கண்டதும், அவள் அழகில் மன மயக்கமடையும் பலவீனமுடையவனாக இருக்கிறான். "கள்ளோ காவியமோ’’என்னும் நாவலின் கதாநாயகன் அருளப்பன் படித்தவன்;பட்டம் பெற்றவன்; கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிபவன்; வேலைக்காரியைக் காதலித்து மணந்து கொண்ட சீர்திருத்தவாதி. எனினும் ஒருகண நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பண்பை இழந்ததால், மனைவியைப் பிரிந்து மனம் வருந்தும் நிலைமைக்கு ஆளாகிறான்.

முரண்பட்ட பண்பு வாய்ந்த கொள்கை கொண்ட கதை மாந்தர்களை டாக்டர் மு.வ.வின் படைப்புக்களிலே