பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை பேராசிரியர் சை. வே. சிட்டிபாபு எம்.ஏ., எல்.டி துணைவேந்தர், மதுரைப் பல்கலைக்கழகம் மதுரை இன்றையத் தமிழில் இலக்கியக் கட்டுரைகள் எழுதுவது ஒரு புதிய முயற்சி. சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை இலக்கியக் கட்டுரைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவைகளில் எடுத்தாளப்படும் ஆய்வு இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனாய்வு மொழி நடை ஆய்வு, வரலாற்று ஆய்வு போன்ற பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. திரு. அ. திருமலைமுத்துசுவாமி ஒரு சிறந்த இலக்கியக் கட்டுரையாளர். இலக்கிய மலர்கள் என்னும் இந்தக் கட்டுரை நூலில், முதலில் இக்கால இலக்கியத்திலிருந்து தொடங்குகிறார்; அடுத்தடுத்து வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துக்கொண்டே சென்று, சங்க இலக்கியத்தைப் பற்றி இறுதியில் சொல்லி முடிக்கிறார். இதிலுள்ள “டாக்டர் மு. வ. அவர்களது நாவல்திறன்' ஒரு திறனாய்வுக் கட்டுரை. திரு. வி. க. வின் இந்தியாவும் விடுதலையும் பற்றியக் கட்டுரை புத்தகத்திறனாய்வு என்று கூற லாம். சங்க காலப் பாரி வள்ளலைப் பற்றிய கட்டுரை வர லாற்று ஆய்வாகச் சிறிதளவு அமைந்திருக்கிறது. மற்றக் கட்டுரைகள் இலக்கிய வரலாறு என்னும் பிரிவில் அடங்கும். டாக்டர் மு. வ. வின் மொழிநடையும் முதல் கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பல ஆய்வுப் பிரிவுகளில் தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் கருத்துக்களையும் பண்பாட்டுக் குறிப்புக்களையும் இலக்கிய விளக்கக் கட்டுரை வடிவத்தில் தந்திருக்கிறார் திரு. திருமலைமுத்துசுவாமி. இவரது இலக்கியப் புலமைச் சிறப்புப் பாராட்டுக் குரியதாகும். இந்நூல் இலக்கிய வரலாறு கற்கும் மாணவர்கட்குப் பெரிதும் பயன்தரக் கூடியது. இம்மலர்களின் இலக்கிய மணத்தை நகர்ந்து அனைவரும் இன்புறுவாராக. மதுரை-21, } நாள்: 24-7-75.

       (ஓம்) சை.வே. சிட்டிபாபு