பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57 னுள் நாம் புகுந்தால் அறமே வடிவாய்த்திகழும் அறவண அடிகளையும், தன் மகளுடைய நல்வாழ்விற்கு அடிகோலிய மங்கை நல்லாள் மாதவியையும், உணர்வுக்கும் அழகுக்கும் முதலில் அடிமையாகிப் பின் திருந்தி மக்களுக்கு அறிவுரை பகரும் நங்கை சுதமதியையும், ஐயக் கடிஞை கையிலேந்தி ஆன்ற மாக்கள் அரும்பசி களைந்த பசிப்பிணி மருத்துவன் ஆபுத்திரனையும், ஆண்மையும் அழகும் கொண்டு, காமத்துக்கு அடிமையாகி, அறம் பிறழ்ந்து மடிந்த உதயகுமாரனையும், மகன் என்னும் காரணத்தால் உதய குமாரனிடம் கொண்ட அன்பால் மணிமேகலையைக் கொடுமைப் படுத்திப் பின் திருந்திய அரசமாதேவியையும், செங்கோல் திறம்பாமாவன் பெண்மையைப் போற்றும் இளங்கிள்ளியையும், கற்புத் தெய்வம் கண்ணகியை ஒத்த கற்பின் செல்வி ஆதிரையையும், விலங்கு வாழ்வு வாழ்ந்து வந்த மக்களே மக்களாக வாழச் செய்த செம்மல் சாதுவனையும், குறுகிய உள்ளம் கொண்ட சித்ராபதியையும் காணலாம். இவற்றிற்கெல்லாம் மேலாய் வருவது வளம் சொரிந்த அமுதசுரபியின மலர்க்கையில் ஏந்தி மனதோறும் புகுந்து புனையா ஒவியம் போல நின்று பிச்சை ஏற்று, காணார், கேளார், கால் முடமானோர், பேசார், பேணுமக்கள், படிவ நோன்பியர், பசி நோயுற்றார், பிணித்தோர் ஆகிய அனைவருடைய பசிப் பிணியையும் தீர்த்து, சிறைக் கோட்டத்தை அறக் கோட்ட மாக்கி, அன்புக்கும் அருளுக்கும் அமைதிக்கும் நிலைக்களமாக விளங்கும், பற்றறுத்து நற்றவம் புரிந்த நங்கை நல்லாளாகிய மணிமேகலையைக் காணலாம். மணிமேகலை நூலின் சிறப்பைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள், 'மணி மேகலை சொல்லெலாம் அறம்; பொருளெலாம் அறம், மணி மேகலை நாடெலாம் அறம், காடெலாம் அறம். புத்தர் பெரு மானைத் தமிழிற் காட்டும் ஒரு மணி நிலையம் மணிமேகலை’ எனக் கூறியுள்ளார். இலக்கியம் என்பது உள்ளத்து உணர்ச்சியைச் சொற்களால் திட்டுவது என்பர் பேராசிரியர் மு. வரதராசனார்.