பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

5. பாரோர் கண்டிலாப் பாரி வள்ளல்

பாரியின் சிறப்பு

பாரி என்பான், அமிழ்தினுமினிய தமிழ் மொழி வழங்கும் தமிழ் நாட்டில் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கி வரையாது வழங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமைவாய்ந்தவன். 'வேள்' என்னும் பட்டம் பெற்ற உழுதுவித் துண்போர் வகையினன். முக்கனி விளையும் முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டிற்கும், மலைக்கும் தலைவன். இப்பறம்பு பாண்டியநாட்டைச் சேர்ந்தது ஆகும் இவ்வுண்மை "வரிசைத் தமிழ் புனை பாரியும் பாண்டியன் மண்டலமே" என்னும் பாண்டி மண்டல சதகச் செய்யுளால் புலப்படுகிறது. இப்பாரி நிழலில்லாத நீண்ட வழியில் தனி மரம் போல நின்று முந்நூறு ஊரையும் மற்றைப் பொருள்கள் எல்லாவற்றையும் பாவலர்க்கும் நாவலர்க்கும் வழங்கி வரையா வள்ளன்மையால் இவ்வையகம் முழுதும் தன் புகழ் பரக்க இருந்தவன். இவனது வரையா வன்மை, "கொடுக்கிலாதானப் பாரியே யென்று கூறினும் கொடுப் பாரிலை" என்று சிவனைத்தவிர வேறு கடவுளரைப்பாடுவது பாவம் என்ற கொள்கையைக் கொண்ட நாவீறு படைத்த நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனராலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதொன்றே இவனது வள்ளன்மையைத் தெள்ளிதிற் புலப் படுத்தும். மேலும் சில தனிப் பாடல்களும் பாரியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. உள்ளத்தினைக் கிளறி உணர்ச்சியை ஊட்ட வல்ல பாடல்கள் நிறைந்த சங்க இலக்கியத்துச் சிறந்த புலவர்களில் ஒருவரும் சங்க இலக்கியத்தில் மிகுதியாகப் பாடல்களைப் பாடியவரும் பாரிக்காகவே வாழ்ந்து உயிர் நீத்தவருமாகிய கபிலராலும் அதியமானையே பாடி அளப்பெரும் புகழ் பெற்ற நல்லிசை வாய்ந்த சொல்லிசை மெல்லியராகிய ஒளவையாராலும்,