பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



85

இனிப் புறப்பகுதியைப் பார்ப்போம். இப்பகுதிக்கண் தலைவன் செய்யும் போர் முதலிய புறச் செயல்கள் பேசப்படும். புறப்பொருளின்கண் பெரும்பாலும் போர் நிகழ்ச்சிகளே விரித்துரைக்கப்படுகின்றன. போர் செய்யக் கருதிய தலைவன் முதலில் பகை நாட்டகத்துக்கண் சென்று ஆவும், ஆனியற் பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடை யோரும், பிள்ளைப் பேறிலாதவரும், போர் செய்ய விரும் பாதவரும் தக்தமக்குப் புகலிடம் தேடிக் கொள்ளுமாறு பறையறைவிப்பான். அதன் பின் அங்குள்ள ஆனிரைகளைக் கவர்ந்து வருவான். அதுகண்ட பகைநாட்டார் ஆனிரைகளை மீட்க வருவர். இருவருக்கும் போர் நிகழும். இது ஒரு முறை.

மாற்றோர் மண் கவர எண்ணிய மன்னன் முதலில் வஞ்சி மிலைந்து வாளும் குடையும் போக்கிப் பின் தானேயொடும் போந்து மாற்ருர் கோட்டையை உழிஞை குடி முற்றுகையிடுவான். கோட்டைக் குரி பவன் நொச்சி சூடிக் கோட்டை பைக் காப்பான். இருவருள் ஒருவர் வெல்வர். வென்றவர் பின்னர் தம் வெற்றியை விழாவாகக் கொண்டாடுவர். அக்காலை பாணர்க்கும் புலவர்க்கும் பிறருக்கும் பரிசில் தரப்படும். அல்லது இரு மன்னரும் ஒருங்கு ஒழிவதும் உண்டு.

இவ்வாறு அமைந்தது புறத்திணை எனப்படும். தொல் காப்பியமும், புறப்பொருள் வெண்பாமாலையும் இதனை நன்கு விளக்கிக் கூறுகின்றன. புறநானூறு என்பது முற்றிலும் புறப்பொருள் பற்றியதே பதிற்றுப்பத்தும் அப்படியே. இவ்வாறு வாழ்க்கையை அகம், புறம் எனப் பிரித்து இலக்கணம் வகுத்தும் இலக்கியம் பல இயற்றியும் வாழ்ந்த நம் முன்னோரின் மொழித்திறத்தை எம்மொழியால் வாழ்த்துவது ? அவர்கட்கு நாம் செய்யவேண்டிய கைம்மாறு அவர்கள் இயற்றிய நூற்களின் அருமை பெருமைகளை உலகிற்கு உணர்த்துவதே ஆகும்.