பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

கூடாது என இலக்கணமும் அமைத்துக் காத்தனர். “மக்கள் துதலிய அகனைந்திணையும், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர்” என்பது தொல்காப்பியர் கூறும் விதி. இவ்வாறு புலவன் ஒருவன், உலகில் நல்லன என்று கண்ட ஒழுகலாறுகள் அனைத்தையும் ஒருங்கே கொணர்ந்து உயிரேற்றிக் கூறுவதே உண்மை இலக்கியமாம்.

மக்கள், கற்கால மக்கள், வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்ட மக்கள், வரலாற்றுக் கால மக்கள், விஞ்ஞானக் கால மக்கள், அணுவாற்றல் கால மக்கள் என வாழ்ந்த காலத்தாலும், காட்டு மக்கள், நாட்டு மக்கள், பனி நாட்டு மக்கள், மலை நாட்டு மக்கள், பாலைவன மக்கள், சிற்றுார் மக்கள், பேரூர் மக்கள் என வாழும் இடத்தாலும், முதலாளி, தொழிலாளி, ஆண்டான், அடிமை, அரசன், அவன் குடி, செல்வன், வறியன், உயர் குடிப் பிறப்பாளன், தாழ்குடிப் பிறப்பாளன், வெள்ளையன், கறுப்பன், ஆண், பெண் எனச் செல்வம், பிறப்பு, நிறம் முதலியவற்றாலும் பலதிறப்படுவர். இவ்வாறு பல்லாற்றானும் வேறுபட்டு விளங்கும் மக்களிடையேயும், ஒருமைப்பாடு மிக்க அடிப்படைப் பண்பாடுகள் சில உள. ஆணும் பெண்ணும் கலந்து வாழ்தல், அன்பும், அருளும் அறமும் உடைமை, பொன், பொருள், புகழ்மீது ஆசை என்பன போலும் ஒரு சில பண்பாடுகளில் அவரிடையே ஒற்றுமை நிலவக் காணலாம்.

மக்கள் இனம் அனைத்திற்கும் ஒத்த அப்பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுவனவே உண்மை இலக்கியங்கள் எனப் போற்றப்படும். அத்தகைய இலக்கியங்