பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


2.தோற்றமும் தொன்மையும்

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒன்று கூடி வாழும் இயல்புடையவே எனினும், ஒன்று கூடி வாழும் அவ்வியல்பு, அவ்வெல்லா உயிரினங்களைக் காட்டிலும், மக்கள் உயிருக்கே மிக மிக இன்றியமையாததாம். மக்களின் தேவை, மற்ற உயிர்களின் தேவையைக் காட்டிலும் மிகுதியாம். இயல்பாகக் கிடைத்த உணவை உண்பது, ஏற்ற இடத்தில் உறங்குவது என்ற அம்மட்டோடு, மக்கள் அல்லாப் பிற உயிர்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. தமக்கு வேண்டும் அவ்வுணவு உறையுள்களையும், அவை முயன்று தேடுவதில்லை. மேலும், ஐம்புல இன்பங்களை ஆரத் துய்க்கும் ஆசையும் அவற்றிற்கு இல்லை. ஆனால், மக்கள் இனத்தின் இயல்பு அவ்வாறு அமையவில்லை. அவர்கள் ஆசைக்கு ஒர் அளவு காணல் ஆகாது. ஐம்புலன்களுள், ஒவ்வொன்றும் எண்ணற்ற ஆசைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. அதனால் மக்களின் தேவை, மற்ற உயிரினங்களின் தேவையைக் காட்டிலும் மிகுதியாக உள்ளன.

தேவை மிக்க மக்களுள், ஒருவர், தமக்குத் தேவைப்படும் எல்லாப் பொருள்களையும் தாமே ஆக்கிக்கொள்ளுதல், இயலாது. தமக்குத் தேவையாகும் பொருள்கள் எல்லாவற்றையும் தாமே ஆக்கிக்கொள்ளுதல் இயலாது. தமக்