பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

பச்சைக் காயாய், பழுக்காத பழமாய், வேகாத கிழங்காய். கீரையாய், சுட்ட ஊனாய் இருந்த உணவு, இன்று அறு சுவை கூடிய அழகிய உணவாய் உருமாறிவிட்டது.

உடலை மறைத்துக்கொள்ள உதவுவது ஆடை. ஆடையின் அடிப்படைத் தத்துவம் இதுவே. ஆனால், மக்கள், நாகரிகம் அறியாது. நாடோடிகளாய்க் காட்டில் வாழ்ந்திருந்த காலத்தில், காட்டு மரங்களின் இலகளையும் பட்டைகளையும், காட்டு விலங்குகளின் தோல்களையும் தம் உடல் மறைக்க மேற்கொண்டனர். உடலை மறைக்க உதவுவதே ஆடை, ஆகவே, அதைச் செய்யவல்ல எதையும் ஆடையாகக்கொள்ளலாம் என்று எண்ணி, இன்றைய மக்களும், அவ்விலைகளையும், மரவுரிகளையும், மான் முதலியவற்றின் தோல்களையும் ஆடையாக மேற்கொள்வதில்லை. மாறாகப் பொன்னிறம் ஊட்டப்பெற்றுப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டும் மெல்லிய ஆடைகளையே அணிந்து கொள்கின்றனர். உடலை மறைக்க உதவுவது ஆடை அடிப்படைக்கொள்கை, இவ்வீரிடத்தும் ஒன்றே; ஆயினும், அவ்வாடைகள் அழகுடையவாயும் இருத்தல் வேண்டும் என இன்று எண்ணுகின்றனர். அதன் விளைவால், பண்டு, இலையாகவும், பட்டையாகவும், தோலாகவும் இருந்த ஆடை, இன்று, பொன்னிறம் ஊட்டப்பெற்றுப் பார்க்கப் பேரழகு தரும் பட்டாகவும், பருத்தி நூலாகவும் மாறிவிட்டது. பண்டைய ஆடை வகைகள் நாகரிகமற்ற நாடோடிகளின் ஆடைகள், இன்றைய ஆடைகள், நாகரிகம் மிக்க நாட்டாரின் நல்லாடைகளாம்.