பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வோரோ, அதற்கு இலக்கணம் கூறுவோரோ இரார். ஆகவே, இலக்கணம் என்பதொன்று உளது என்றவுடனே, அவ்விலக்கணத்தை உடைய ஒரு பொருள், அதாவது அவ்விலக்கணம் தோன்றுவதற்குக் காரணமாய் ஒரு பொருள் உளது என்பது தானே பெறப்படும். தமிழ் மொழி, தலைசிறந்த இலக்கணமாகத் தொல்காப்பியத்தைப் பெற்றுளது. ஆகவே, அப்பேரிலக்கணப் பெரு நூல் தோன்றுவதற்குக் காரணமாய் இலக்கியங்கள் பலவற்றையும், அம்மொழி பண்டே பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

ஒரு பொருளுக்கு இலக்கணம் கூறுவது, எளிதில், எண்ணியவுடனே இயலுவதன்று. மாடு என்ற பொருளுக்கு இலக்கணம் கூற முன் வந்த ஒருவன், முதலில், நான்கு கால்கள் உடையது மாடு என்றான் : நான்கு கால்கள் குதிரைக்கும் உளவே என்ற தடை எழுந்தவுடனே, நான்கு கால்களையும் இரண்டு கொம்புகளேயும் உடையது மாடு என்றான். அங்கிலையில், அவ்வியல்பு ஆட்டிற்கும் உண்டே என்று ஒருவன் கூற, நான்கு கால்களையும், இரண்டு கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றான்; அவ்வியல்பு யானைக்கும் பொருந்தும், ஆகவே கூறிய இலக்கணம் நிரம்பாது என்று ஒருவன் சொல்ல, பிளவுண்ட குளம்புகளைக் கொண்ட நான்கு கால்களையும் இரண்டு கொம்புகளையும், நீண்ட வாலையும் உடையது மாடு என்றன். அதுவும் அமையாது என்று கண்டவிடத்துக் கூறிய இலக்கணங்களோடு, கன்று ஈன்று. அக்கன்று உண்டு எஞ்சிய பாலை, மக்கள் பயன்கொள்ள அளிப்பது மாடு என்றான்.