பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

இவ்வாறு தமிழ் மொழிக்கும், அம்மொழி வழங்கும் தமிழ் நாட்டிற்கும், அந்நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், அன்று அது கூறிய இலக்கணம், இன்றும் பொருந்துவதாகவே உளது. அவ்விலக்கணத்தைச் சிறிதேனும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிலை, இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த இன்றும் உண்டாகவில்லை. தான் கூறிய இலக்கணத்தை அது அவ்வளவு தெளிவாகக் குறையேதும் காணாவாறு முற்ற உணர்ந்து கூறியுள்ளது. நேற்றுக் கூறிய இலக்கணம் இன்று இல்லை என்ற நிலையற்ற இவ்வுலகில், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் மாற்றிக் கூற வேண்டிய நிலை உளது என்ற குறை கூறாவாறு, நிரம்பிய இலக்கணத்தை உணர்த்தியுளது தொல்காப்பியம். இவ்வியல்பு உலக மொழிகள் எதற்கும் இல்லாத தமிழ் மொழி ஒன்றற்கே உள்ள தனிச் சிறப்பாம்.

தொல்காப்பியர், தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் கூறிய இலக்கணத்தைத் தாம் ஒருவரே, தம் வாழ்நாள் காலத்திற்குள்ளாகவே அறிந்து உரைத்தாரல்லர். அவருக்கு முன்னர், எத்தனையோ ஆசிரியர்கள், அவை பற்றி எவ்வளவோ கூறியுள்ளார்கள். அவ்வாறு அவர்கள் கூறிய அவ்விலக்கணங்களுள், அக்கால வளர்ச்சியோடு நோக்கப் பொருந்தாதனவற்றை விலக்கி, கூறாதனவற்றைக் கொண்டு கூறியதே தொல்காப்பியம். “என்மனர் புலவர்” “இயல்பென மொழிப” என அவர் ஆளும் தொடர்கள்