பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

இதை உறுதி செய்ய வல்லவாம். “தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தோன்” எனத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் கூறுவதும் காண்க.

தமிழ் மொழி தோன்றிய காலத்திற்கும், அதற்கு நிரம்பிய இலக்கணம் உரைக்கும் தொல்காப்பியம் தோன்றிய காலத்திற்கும் இடையே, பல ஆசிரியர்கள் பல்வேறு காலங்களில் தோன்றித் தம் தம் காலத்தே, தமிழ் ஒலிகளிலும், தமிழ்ச் சொற்களிலும், தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தாம் கண்ட குறைகளையும் திருத்தங்களையும் நீக்கியும் கொண்டும் இலக்கணமும் கூறிச் சென்றனர். இறுதியாக அவர் கூறிய இலக்கணங்களில் செப்பம் செய்து, சிறந்த தம் நூலே அளித்தார் தொல்காப்பியனார். காடுகளில் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த தமிழ் மக்களிடையே தோன்றி, அவர் நாகரிக நெறியில் வளர வளர, அவரோடு தானும் வளம் பல பெற்று வளர்ந்து, இனியும் வளர வேண்டா இனிய நிலைபெற்ற தமிழ் மொழியின் இறவாப் பேரிலக்கியங்களுக்குத் தொல்காப்பியர் கூறும் இலக்கணங்களும் அவ்வாறு வந்தனவே.

இலக்கியம், அவ்விலக்கியத்தைப் பெற்ற மக்கள் வாழ்க்கையோடு இரண்டற இணைந்து நிற்பது. சிறந்தது எனத் தாம் கண்ட நிகழ்ச்சிகளைச் சிறந்த சொற்களால் சிறப்பாக எடுத்துரைப்பதே இலக்கியமாம். நாடு நாரிகத்தின் நடுநாயகமாய் நாட்டு மக்கள் உணவாலும், உடை-