பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

குறிக்கும் பிற மொழிச் சொற்களையும், அம் மக்களின் கொள்கைகளயும் தம் மொழிக்கும், தம் பண்பாட்டிற்கும் ஏற்பத் திருத்தி மேற்கொள்வதையே செய்தல் இயலும். அவற்றை அறவே விடுத்து வாழ்தல் இயலாது.

புதிய பொருள்களும், புதிய சொற்களும், புதிய பழக்க வழக்கங்களும் ஒரு பால் இடம்பெற, தேவையற்றுப் போன பொருள்களும், அவற்றைக் குறிக்க வழங்கும் சொற்களும், பழக்க வழக்கங்களும் ஒருபால் வழக்கற்றும் போதலும் நிகழும், உலகியலுக்கும், உலகில் வழங்கும் இலக்கியங்கட்கும் உள்ள இவ்வுறவு முறையினை உணர்ந்தன்றோ “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்றும், “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்றும் விதி வகுப்பாராயினர் இலக்கண ஆசிரியர்கள்.

ஒரு மொழியில், பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை நோக்கின், பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகிய இப்பண்பு இடம் பெற்றிருத்தலை உணரலாம். இவ்வாறு பழையன கழிந்து, புதியன புகுந்து தோன்றுவதையே, ஒரு சாரார் இலக்கிய வளர்ச்சி எனக் கொள்வர். பழையன எல்லாம் பழிக்கத்தக்கன; புதியன எல்லாம் போற்றற்குறியன எனஎவரும் எண்ணுதல் கூடாது. அவ்வாறே, பழையன எல்லாம் பாராட்டற்குரியன; புதியன எல்லாம் பழித்தற்குரியன என்று எண்ணுதல் கூடாது. இரு திறத்தாரும் பிழையுடையாரே யாவர். பாராட்டற்குரியனவும், பழித்தற்குரியனவுமாய பண்புகள், பழையன புதியன ஆய இரண்டிலும் உள. ஆகவே, இலக்கியங்கள் தோன்றிய