பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறு பாண்டரங்கன், திரையன், மாறன், துவரைக்கோமான், கீரந்தை முதலாம் புலவர் ஐம்பத்தொன்மர் இடைச் சங்கத்திலும், சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந் திருமாறன், நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் முதலாம் புலவர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கத்திலும் இருந்து இலக்கியச் செல்வங்களை ஆக்கியும், ஆராய்ந்தும் வாழ்ந்தனர்.

காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகவுள்ள அரசர் எண்பத்தொன்பதிமர் தலைச் சங்கப் புலவர்களையும் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத் திருமாறன் ஈறாகவுள்ள அரசர் ஐம்பத்தொன்பதின்மர் இடைச் சங்கப் புலவர்களையும், முடத்திருமாறன் முதலாக, உக்கிரப் பெருவழுதி ஈறாக உள்ள அரசர் நாற்பத்தொன்பதின்மர் கடைச் சங்கப் புலவர்களையும், உணவும், உடையும், உறையுளும் அளித்துப் பேணி; அவர்கள் இலக்கியம் வளர்க்க அருந்துணை புரிந்தனர்.

தலைச் சங்கப் புலவர்கள், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்களையும், இடைச் சங்கப் புலவர்கள் கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலையகவல் முதலிய நூல்களையும்; கடைச் சங்கப் புலவர்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது, பரிபாடல், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை முதலிய நூல்களையும் ஆக்கி ஆராய்ந்து, அழகிய தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தனர்.