பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

மனக் கவலையால் உடலும் உள்ளமும் தளர்ந்து வந்தான் ஒருவனைக் கண்டு, மதுரையில் ஆராய்ந்து கண்ட தமிழ் இலக்கியத் துறைகள் பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு, “உடல் தளர்ந்தனையோ, கூடலின், ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ?” என மணிவாசகப் பெருந்தகையார் வினாவும் வினாவால், மதுரையில் அமைந்த கடைச் சங்கத்தில் இருந்து, புலவர் பெருமக்கள் மேற்கொண்ட தமிழாராய்ச்சியின் அருமை பெருமைகள் நன்கு புலனாதல் அறிக.

தமிழிலக்கியச் செல்வங்களை ஆக்கியும், ஆராய்ந்தும் வளர்த்தற் பொருட்டுத் தோன்றிய சங்கங்கள் இருந்த தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கோள்களால் அழிவுற்றன. இக் கடல் கோள் நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரம் பாடிய சேரகுல இளங்கோ, “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல் கொள்ள” எனக் குறிப்பாகவும், அச்சிலப்பதிகாரத்திற்கு உரை கண்ட அடியார்க்கு நல்லார், “பஃறுளி என்னும் ஆற்றிற்கும், குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே, எழுநூற்றுக் காவதியாறும், இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன் பாலை நாடும், ஏழ் பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குண காரை நாடும், ஏழ்குறும் பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும்; குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தட நீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்”, என விரிவாகவும் எடுத்துரைத்துள்ளனர்.