பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ் வளர்த்த சங்கங்களின் நிலைக்களமாய நகரங்கள் இரண்டும் கடல் கோளால் அழிவுறவே, அந் நகரங்களில் இருந்த தமிழிலக்கியச் சுவடிகள் பலவும் அக்கடல் வாய்ப்பட்டு அழிந்தன. அதனால், அம்முதல் இடைச் சங்கங்களில் ஆக்கப்பெற்ற அந்நூல்களைக் காணும் ஆகூழ், இக்கால மக்களுக்கு இல்லாமற் போயிற்று, அவ்வாறு அழிந்தன போக, இன்று எஞ்சி நிற்பன பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும் ஆய பதினெட்டு இலக்கியங்களும், தொல்காப்பிய மாய இலக்கணமுமேயாம். திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் என்ற பத்து இலக்கியங்களும் பத்துப் பாட்டு எனப் பெயர் பெறும். நற்றிணை, குறுந்தொகை ஐங்குறுநூறு புறநானூறு பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு என்ற இவ்வெட்டு இலக்கியப் பெரு நூல்களும் எட்டுத் தொகை எனப் பெயர் பெறும். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ற இவ்வரிசைக்கண் வந்த நூல்கள் மட்டும் நானூற்று அறுபத் தெண்மர்க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் பாடிய இரண்டாயிரத்து நானூற்றுப் பத்துப் பாக்களைக் கொண்டுள்ளன.

மக்கள் பால் கிடந்து மாண்பு தரும் பண்பாடுகளைப் பார்த்துப் பாராட்டி, அப்பண்பாடுகளைப் பிறநாட்டாரும், பிற்காலத்தில் வாழ்வாரும் அறிந்து மேற்கொள்ளுதல்