பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

வேண்டும் என்ற வேட்கையின் விளைவால், பாட்டிடை அமைத்து இசைப்பனவே இலக்கியங்களாம். ஆதலின், சங்க கால இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை ஆராய்ந்து காண்பதன் முன்னர், அவ்விலக்கியம் தோன்றற்காம் வாழ்க்கையினை மேற்கொண்டு வாழ்ந்த பழந்தமிழ் மக்களின் பண்பாட்டியல்பினை ஆராய்ந்து காண்பதே அமைவுடைத்து. ஆகவே, இலக்கிய வளர்ச்சியின் இயல்புகளை, அவ்விலக்கியச் செல்வங்கள் எழுவதற்குக் காரணமாய மக்களின் மாண்புகளோடு ஒருங்கு வைத்து ஆராய்தலை மேற்கொள்ளுவோமாக.

சங்க காலம், தமிழக வாழ்வில் தலை சிறந்த காலம். தமிழ் நாட்டு வாணிகம், தமிழகத்தோடு நில்லாது. கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவித், தமிழகத்து வளத்தை, வாழ்வை வனப்புடைய தாக்கிய காலம். சோழநாட்டுப் புகாரிலும், பாண்டி நாட்டுக் கொற்கையிலும், சேர நாட்டு முசிறியிலும் வாணிகம் கருதி வந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் பெருந்திரளாக வந்து வாழ்ந்த காலம். தமிழ் நாட்டு அரசர்கள், தமிழகத்தின் பெருமையினைப் பிற நாட்டாரும் உணருமாறு வெற்றி கண்டு வாழ்ந்த காலம். சேரருள் சிறந்த செங்குட்டுவனும், சோழருள் சிறந்த கரிகாற் பெருவளத்தானும், பாண்டியருள் சிறந்த நெடுஞ்செழியனும் ஆட்சி புரிந்த காலம் அது. தமிழ் வேந்தர் கொண்டாடிய விழாவிற்கு, இலங்கை வாழ் அரசன் கயவாகுவும், வடநாடு வாழ்நூற்றுவர்கன்னரும் வந்துச் சிறப்பித்த வளமார் காலம். காவிரியில் கரிகாலன் கட்டிய கரையாலும், கல்லணையாலும், “சோழ வளநாடு சோறுடைத்து” என்றசொல் பிறக்க வளம் பெருகிய