பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

காலம் ஆட்சி நலமும், அரும் பொருள் வளமும், வேலி ஆயிரமாக விளைந்த விளைவுச் சிறப்பும் பெற்றமையால், மக்கள் பசியும், அது காரணமாய்ப் பிணியும், அது காரணமாய்ப் பகையும் அற்று வாழ்ந்த காலம். அன்பும், ஆண்மையும், அருளும், ஆற்றலும் காதலும் கடமையும், உரனும், உயர்பேரொழுக்கமும் உடையராய் வாழ்ந்த வனப்பு மிக்க காலம். ஆன்ற விந்தடங்கிய சான்றோர் பலர், அரசனும், அவன் கீழ் வாழ் மக்களும் அற வழி கடவாது, மறவழி செல்லாது வாழ்வதற்காம் அறிவுரை பல வழங்கி, வழிகாட்டிகளாய் வாழ்ந்த காலம். அரசர் அந்தணர் குடிகளிலும், வணிகர் வேளாளர். வழியிலும், குயவர் கொல்லர் குலத்திலும், மருத்துவமும், நெசவும் அறிந்தார் மனைகளிலும், மறவர் எயினர் மரபிலும் பிறந்த ஆடவர் பெண்டிர் ஆய இரு பாலாரிலுமாகப் புலவர் பலர் தோன்றிப் புகழ் வளர வாழ்ந்த காலம்.

கண்ணாரக் கண்ட காட்சிகளும், காதாரக் கேட்ட நிகழ்ச்சிகளும், அவற்றைக் கண்டதாலும், கேட்டதாலும் எழுந்த உணர்ச்சிகளுமே, கருத்து நிறைந்த கவிகளாக வெளிப்படும் ஆதலின், அன்று பாடிய புலவர்கள் எல்லோரும், தம் பாடற் பொருளாகத் தமிழகக் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையுமே மேற்கொண்டனர். அதனால், அன்று தோன்றிய தமிழ்ப் பாக்கள், தாயன்பு, தந்தை கடன், கன்னியர் கற்பு, காளையர் கடமை, அரசர் செங்கோல், அமைச்சர் நல்லுரை, ஆன்றோர் அறம், வீரர் வெற்றி என