பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பனுக்கே பொருந்தும். இவ்வுலகியல் உணர்ந்தவள் அவள். ஆகவே, அவள் அவன் பால் சென்றாள்; அவனுக்குரிய பலாமரத் தோப்பைச் சூழ, அரணாக அமைந்துள்ள மூங்கில் வேலியருகே இருந்த அவனைக் கண்டாள்; காதலியின் தோழியைக் கண்ட அவனும், அவள் வழியாகத் தன் காதலியின் நிலைபற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தால், அவளை நெருங்கினான். அவள், அவனோடு, அவன்பால், அங்கு ஏதும் கூறாது, தங்கள் ஊர்ப்புறத்திற்கு அழைத்து வந்தாள். ஆங்கே ஒரு பலா மரம் பாதுகாப்பற்று நின்று கொண்டிருந்தது. அதன் சிறிய கிளையொன்றில், பெரிய பழம் ஒன்று பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அம்மரத்தருகே இருவரும் நின்றனர். ஆங்கு அவன் பால் பின் வருமாறு கூறினாள்: -

"அன்பே! உங்கள் பலாத் தோப்பு, மூங்கில் வேலியால் சூழப் பெற்றுக் காவல் நிறைந்துளது. மேலும், ஆங்குள்ள பலாமரங்களெல்லாம் வேர்ப் பலா மரங்கள்; பழுத்த பழங்கள் காம்பற்று வீழ்ந்தாலும் பழுதுறா; மேலும் வேலியைத் தாண்டிச் சென்று பழங்களைத் திருடுவதும் இயலாது. ஆகவே, உங்கள் தோப்புப் பலாப் பழங்கள் தாமே பழுத்து வீழ்ந்தும் பாழாகாது; பிறரால் பற்றப்பட்டும் பாழாகாது. அத்தகைய பலாத்தோப்புடையாய் நீ. ஊரில் உள்ள பலாமரங்கள் எல்லாவற்றிற்கும் அந்நன்னிலை வாய்க்காது. இதோ நிற்கும் இப்பலா மரத்தைப் பார். இம்மரத்தைச் சூழ வேலி எதுவும் இல்லை. ஆகவே, இதனருகே எவரும் சென்று, இம்மரத்துக் கனியை எளிதிற் கொண்டு செல்லுதல் இயலும். அம்மட்டோ; அம்மரத்தில் பழுத்துத் தொங்கும் அக்கனியைப் பார்;