பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

எனப் பெயர் பெறும் இப்போராட்டத்தால் அழிந்தார் எத்தனை ஆயிரவரோ?

காதல், கடமை ஆகிய இரண்டையும் ஒப்பமதித்து அவற்றுள் எதையும் கைவிடக் கருதாது, இரண்டையும் ஒருங்கே பெறுதல் வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தால், காதலியைப் பிரிந்து பொருள் சேர்க்கும் கடமை மேற்கொண்டு வந்து, இடை வழியில் காதலியின் கண்ணீர் கண்டு கலங்கி, மீண்டும் கடமை நினைந்து மேற்சென்று, இவ்வாறு காதலாலும், கடமையாலும் மாறி மாறிக் கட்டுண்டு, அப்போராட்டத்தால் உடல் தளர்ந்து, காதல் உள்ளத்தால், கடமையை விரைவில் ஆற்றி விழுப்புகழ் பெறத் துடிக்கும் அவ்விளைஞனைக் கண்ட ஒரு பெரியார், ஆசையும் வேண்டும்; ஆனால், அது அளவோடு அமைதலும் வேண்டும்; அளவிற்கு மீறியவழி அதை அடக்குதலும் வேண்டும் என்ற அறிவுடையார் உலகத்தில் அரியர். அத்தகையாரே, உலகத்தில் உண்மையான புகழைப் பெறுவார்; அத்தகைய உள்ளம் வாய்ந்தவர், உலகில் நிறைந்துவிடின், அவ்வுலகில் அமைதி நிலவும் என்ற உண்மையை உலகறிய உணர்த்தும் உயர்ந்த வழிகாட்டியாகுக அவன் செயல், என்ற நல்லெண்ணத்தால், அவன் மனப் போராட்டத்தை அழகிய பாட்டொன்றில் வைத்துப் பாராட்டிச் சென்றுள்ளார்;

புறந்தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண், உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்;