பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

யானும் ஒரு வீரனோ? பகைவர் எங்கள் தலைவனைக் காணவும் நடுங்குவர்; அவனைக் காண மட்டு மன்று, அவன் வாழும் அரணைக் காணினும் அஞ்சுவர். பகைவர் தான் வாழும் இடம் காணவும் அஞ்சுமளவு பேராண்மை பெற்று விளங்கும் எங்கள் படைத்தலைவனன்றோ, உண்மையில் பெரு வீரனாவன்.”

உண்மையில் ஒருவன் பெரு வீரனாயின் அவன் களம் புகுந்து படையெடுத்தல் கூடாது; அவன் பாசறைக் கண் உளன் என்பதறிந்தே, அவன் பகைவர் புறங்காட்டி ஓடுதல் வேண்டும் என்று கூறி, ஆண்மைக்குப் புதுப்பொருள் கண்ட அப்பழந்தமிழ் வீரன் சொல்கேட்ட புலவர், அவ்வீரன் உள்ளத்தைத் தம் பாடற் பொருளாக்கிப் பாராட்டிச் சென்றார்:

“இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்லரா உறையும் புற்றும் போலவும்,
கொல்லேறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றரும் துப்பின் மாற்றோர், பாசறை
உளன்என வெரூஉம் ஓர் ஒளி
வலனுயர் நெடுவேல் என்னை கண்ணதுவே.”

—புறம்.309

வீரர்களைப் பெற்றுப் பேணித்தரும் பெருமை மிக்க மறவர் குடியில் வந்த தாயொருத்தி, தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில், அழகிய சிறிய வீடொன்று அமைத்து வாழ்ந்து வந்தாள். அவள் பெற்ற ஒரே மகன், நாடு காவல் கருதி நடைபெறும் போரில் கலந்து கொள்வான் போயிருந்தான். சென்றவன், நாட்கள் பல ஆகியும்