பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

சிற்றூர்களும், பேரூர்களும் சிதைந்து சீரழிந்தன. நாட்டில் அமைதி குலைந்தது; அமைதி குலையவே, வீடுகளும் அமைதிகுன்றி அழிந்தன. மக்கள் இன்ப வாழ்வை மறந்தனர்; மனக்கவலை மிக்கு மாண்டனர்.

அந்நிலை கண்ட ஆன்றோர்கள் அகம்மிக வருந்தினர். போரை ஒழித்து, மீண்டும் அமைதியை நிலை நாட்டுவதில் நாட்டம் கொண்டனர். அரசர்கள், பகை கொண்டு அமர்புரிதற்குப் பொன்னின்மாட்டும், பொருளின் மாட்டும், புகழின்மாட்டும் அவர் கொண்டுள்ள ஆசையே காரணமாம் என்ற உண்மை உணர்ந்தனர்; உணர்ந்த அவர்கள், அப்பொன், பொருள், புகழ்களால் பெறலாம் இன்பம், சிறிது; மேலும் நிலையற்றது என்ற நில்லாமை உணர்வையும், இவ்வின்பத்தினும் சிறந்த பேரின்பம் ஒன்று உளது; அது நிலைத்த இன்பமும் ஆம்; அது, அவரவர் ஆற்றும் நல்வினைகட்கு ஏற்ப வாய்க்கும் என்ற வீட்டுலக உணர்வையும், அக்கால அரசர்களும், மக்களும் மனங்கொள்ளுமாறு செய்வதில் கருத்துடையராயினர்; இவ்வாறு நிலையாமை எண்ணம் நிலைபெறச் செய்து, அதன்வழியே பொன், பொருள், புகழ்கள் மாட்டுத் தோன்றும் ஆசையையும், அவ்வாசை காரணமாக எழும் பற்றாமை உணர்வையும் அப்பற்றாமை உணர்வு காரணமாகத் தோன்றும் பகை உணர்ச்சியையும், அப்பகை காரணமாக விளையும் நாடழி வினையும் தடுத்து அமைதிகாண விரும்பிய ஆன்றோர்களின் ஆர்வத்தின் விளைவால், தமிழகத்தில், இல்வாழ்க்கையின் இன்பநிலையினைக் கூறும் அகத்திணை இலக்கியங்களும்,